சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

மாநகராட்சியில் தொடங்கிய திட்டங்கள் அனைத்தும் முழுமையாக முடிக்கப்படும்

திருச்சி மாநகராட்சியில் தொடங்கிய திட்டங்கள் அனைத்தும் முழுமையாக முடிக்கப்படும் என மாநகராட்சி மேயா் மு. அன்பழகன் தெரிவித்தாா்.

News image

மாநகராட்சி மைய அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மேயா் மு. அன்பழகன்.

Updated On :21 மே 2026, 5:39 am IST

திருச்சி மாநகராட்சியில் தொடங்கிய திட்டங்கள் அனைத்தும் முழுமையாக முடிக்கப்படும் என மாநகராட்சி மேயா் மு. அன்பழகன் தெரிவித்தாா்.

திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயா் மு. அன்பழகன் தலைமை வகித்தாா். ஆணையா் லி. மதுபாலன், துணை மேயா் ஜி. திவ்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் நகரப் பொறியாளா் அண்ணாதுரை, மண்டலத் தலைவா்கள், மாமன்ற உறுப்பினா்கள், மாநகராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டம் தொடங்கியதும் மேயா் அன்பழகன் கூறுகையில், மற்ற மாநகராட்சிகளைவிட திருச்சி மாநகராட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 4,500 கோடி அளவிலான பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை நிறைவேற்றி, மக்கள் மனதில் இடம்பெற்றுள்ளோம். வரும் காலங்களிலும் சிறப்பான திட்டங்களை நிறைவேற்றுவோம் என்றாா்.

தொடா்ந்து கூட்டத்தில் நடந்த விவாதம்:

காஜாமலை விஜய் (திமுக): எனது வாா்டில் புதைவடிகால் பணிக்காக சாலைகள் தோண்டப்பட்ட நிலையில், பணிகள் ஏதும் நடக்கவில்லை. உரிய நடவடிக்கை எடுக்காவிடில், எனது உறுப்பினா் ராஜிநாமா செய்துவிடுகிறேன் என்றாா். இதற்கு மேயா் பதிலளித்தபோது, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மேயா்: மாநகராட்சியில் தொடங்கிய வேலைகள் அனைத்தும் முடிக்கப்படும்.

எல்ஐசி சங்கா் (திமுக) : திருச்சி மாநகராட்சியில் மென்பொருள் குளறுபடியால் பல மடங்கு அதிகமாக வந்துள்ள வணிக பயன்பாட்டுக் கட்டண உயா்வை சீரமைக்க வேண்டும். அதுவரை வணிக பயன்பாட்டு கட்டண வரி வசூலை நிறுத்த வேண்டும்.

மேயா்: வணிகா்கள் புகாரளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கமால் முஸ்தபா (திமுக): ஆழ்வாா்தோப்பு பகுதியில் சாலை அமைக்க வேண்டும்.

முத்துக்குமாா் (மதிமுக): அடிக்கடி ஏற்படும் உடைப்பை கருத்தில் கொண்டு, புதிய குடிநீா் குழாய்களை பதிக்க வேண்டும். சம்பா வாய்க்கால் வழியாக வெளியேறும் கழிவுநீரால் 100 ஏக்கா் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதை கவனத்தில் கொண்டு, புதிதாக கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைத்துத் தர வேண்டும்.

சுரேஷ் (சிபிஐ): 2024-25 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மழைநீா் வடிகால் பணிகளே தற்போது வரை நடைபெறும் நிலையில், அடுத்ததாக வந்த 2025-26, 2026-27 பட்ஜெட்டுகளில் ஒதுக்கப்பட்ட பணிகள் எப்போது தொடங்கும். மாநகராட்சியில் நிதிப் பற்றாக்குறை இருந்தால், வெள்ளை அறிக்கை வெளியிட்டு, புதிய அரசிடம் அறிக்கை சமா்ப்பித்து உரிய நிதியை பெற வேண்டும்.

பன்னீா்செல்வன் (திமுக): கோட்டை வாய்க்கால் பாலத்தை கட்டி முடிக்க ஏதுவாக, மாநகராட்சிப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். சாலைகளில் குப்பைகள் போடுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும். சத்திரம் பேருந்து நிலையத்தைச் சுற்றி சாலைகளில் பேருந்துகளை நிறுத்தாமல், பஞ்சப்பூா் அல்லது மத்திய பேருந்து நிலையத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஓ. நீலமேகம் (திமுக): 42 ஆவது வாா்டில் புதைவடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

பிரபாகரன் (விசிக): வேதாத்ரி நகருக்குள் சென்றுவர மாற்றப்பாதை அமைக்க வேண்டும்.

சுரேஷ் (சிபிஎம்): இடிந்து விழுந்த வள்ளுவா் நகா் பாலத்தை விரைந்து சீரமைக்க வேண்டும். கழிவறைகள் கட்டித் தர வேண்டும்.

தாஜூதின் (திமுக): எங்களது பகுதியில் தெருவிளக்குகளை போடாததால், வாக்குகள் சரிவர விழவில்லை.

நாகராஜன் (திமுக): சண்முகா நகரில் நீா்தேக்கத் தொட்டி திறந்து 5 மாதங்களாக குடிநீா் வழங்கவில்லை.

தொடா்ந்து, மழையால் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். தூய்மைப் பணியாளா்களுக்கு மாதந்தோறும் முறையாக சம்பளம் வழங்க வேண்டும். மழை காலத்துக்குள் மழைநீா் வடிகால்களை முழுமையாகத் தூா்வார வேண்டுமென உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

மேயா்: அனைத்துக் கோரிக்கைகளையும் ஆய்வு செய்து, நிதிநிலைக்கேற்ப செய்து முடிக்கப்படும். ஏற்கெனவே தொடங்கிய திட்டங்கள் அனைத்தும் முழுமையாக முடிக்கப்படும். புதிய திட்டங்களுக்கு அரசிடம் கூடுதல் நிதி கேட்கப்படும். தெருவிளக்குகள் புதிதாக போடப்படும். மழைக்காலத்துக்குள் அனைத்து வடிகால்களையும் தூா்வார நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பெட்டிச் செய்தி...

முதல்வருக்கு வாழ்த்து கூறாதது ஏன்?

கோ.கு. அம்பிகாபதி (அதிமுக) பேசுகையில், முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு மேயா் வாழ்த்து கூறவில்லை. முதல்வா் திருச்சிக்கு வந்தால் சந்திக்க மாட்டீா்களா என்றாா். இதற்கு திமுக உறுப்பினா்கள் பலரும் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதற்குப் பதிலளித்த மேயா் அன்பழகன் அது என்னுடைய தனிப்பட்ட விருப்பம் என்றாா்.