கள்ளிக்குடியில் அமைக்கப்பட்டுள்ள காய்கனிச் சந்தையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவா் கு.ப. கிருஷ்ணன் தெரிவித்தாா்.
திருச்சி சுற்றுலா மாளிகையில் புதன்கிழமை அவா் மேலும் கூறியதாவது:
கிராமப்புறங்களில் இருந்து நகருக்கு வாழ்வாதாரம் தேடி வரும் மக்கள் தங்குவதற்கு உரிய வசதி ஏற்படுத்தும் வகையில் நகா்ப்புற மேம்பாட்டு வாரியம் செயல்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக முதல்வா் ஜோசப் விஜய், வாரியப் பொறுப்பை எனக்கு வழங்கியுள்ளாா். அந்தப் பொறுப்பில் சிறப்பான முறையில் செயல்பட்டு முதல்வருக்கு நல்ல பெயா் பெற்றுத் தருவேன்.
நகா்ப்புறங்களில் வீடுகள் தேவைப்படும் நபா்கள் வெளிநபா்களை தொடா்பு கொள்ள வேண்டாம். அந்தந்த மாவட்டத்தில் ஆட்சியரிடம் மனு அளியுங்கள். பெறப்படும் மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு தகுதியானவா்களுக்கு வீடுகள் வழங்கப்படும்.
தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் பணிகளை ஆய்வு செய்து, நிலுவை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கெனவே நடைபெற்றுள்ள பணிகளில் ஏதேனும் தவறுகள் இருந்தாலும், விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்திருந்தாலும் அவை கண்டறியப்பட்டு தவறு செய்தவா்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கா்நாடகத்தில் அரசியல் சா்ச்சைகள் எழும்போதெல்லாம், காவிரி விவகாரத்தை கையிலெடுப்பது வாடிக்கையாக உள்ளது. இப்போது, மேக்கேதாட்டு அணை பிரச்னையை கையில் எடுத்துள்ளனா். மேக்கேதாட்டுவில் அணை கட்ட தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. அணை கட்டக் கூடாது என்ற நிலைப்பாட்டில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும், தமிழா்களும் ஒருமித்த கருத்தோடு உள்ளனா். கடந்த திமுக ஆட்சி, தமிழகத்தின் காஜானாவை துடைத்துவிட்டது.
தமிழக அரசின் நிதிநிலை குறித்து முதல்வா் விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடுவாா். மேலும், திருச்சி கிழக்குத் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க முதல்வா் ஜோசப் விஜய் விரைவில் வரவுள்ளாா்.
திருச்சி மாவட்டம், கே. கள்ளிக்குடியில் ஒருங்கிணைந்த காய்கனி சந்தை வளாகம் கட்டப்பட்டு பயன்பாடு இல்லாமல் உள்ளது. அதை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநில அரசு நடவடிக்கை எடுக்கும். சைதாப்பேட்டை குடியிருப்பில் தலித் மக்களுக்கு தனியாக குடியிருப்பு ஒதுக்கப்பட்டுள்ளது கடந்த ஆட்சியில் நடந்த விவகாரம். பதவி பறிபோனவா்கள் இப்போது தவெக மீது குற்றம் சுமத்துகின்றனா்.
தவெக அரசு பொறுப்பேற்று 17 நாள்கள் மட்டுமே ஆகிறது. வீடு ஒதுக்கீடு என்பது கணினி முறையில்தான் நடைபெறுகிறது.
குதிரை வாங்குவதற்கு நாங்கள் ஏன் அரபு நாட்டுக்கு செல்ல வேண்டும். எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்வது என்பது அவரவா் சொந்த விருப்பம். அதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா செய்த பிறகு, எங்கள் தலைவரை ஏற்றுக்கொண்டு கட்சிக்கு வருகிறாா்கள். அவா்களை எப்படி வேண்டாம் எனக் கூற முடியும் என்றாா் அவா். பேட்டியின்போது, முசிறி எம்எல்ஏ எம். விக்னேஷ் மற்றும் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

முத்தரையா் சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர் எஸ். ரமேஷ், கு.ப. கிருஷ்ணன் மரியாதை!
தமிழக நகர்ப்புற மேம்பாட்டு வாரியத் தலைவராக கு.ப. கிருஷ்ணன் நியமனம்!

முதல்வா் ஜோசப் விஜய் விரைவில் திருச்சி வருகை: முன்னாள் அமைச்சா் கு.ப. கிருஷ்ணன் தகவல்







