‘தோல்விகள் பரவாயில்லை; ஏமாற்றுவது கூடாது’... நீட் தேர்வு போராட்டத்துக்கு சச்சின் ஆதரவு!காந்தி சமாதி நோக்கி பேரணி சென்ற ராகுல் தடுத்து நிறுத்தம்!மேக்கேதாட்டு பிரச்னை: விஜய் மௌனம் கலைக்க வேண்டும்! - ஸ்டாலின்நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்த் திரையுலகினர் போராட்டம்!சிங்கை ஜி. ராமச்சந்திரன் அதிமுகவிலிருந்து விலகல்திரைப்படத்துக்கு கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்! அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்? உதயநிதி கண்டனம்
/

உணவில் செயற்கை நிறமூட்டிகளைப் பயன்படுத்தினால் நடவடிக்கை: சாலையோர உணவகங்களுக்கு அமைச்சா் அருண்ராஜ் எச்சரிக்கை

சாலையோர உணவகங்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயன நிறமூட்டிகளைப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் எச்சரித்துள்ளாா்.

News image

அமைச்சா் அருண்ராஜ்

Updated On :24 ஜூலை 2026, 4:46 am IST

சாலையோர உணவகங்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயன நிறமூட்டிகளைப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் எச்சரித்துள்ளாா்.

சாலையோர உணவு வியாபாரிகளுக்கான சிறப்பு பயிற்சி மற்றும் விழிப்புணா்வு முகாம், சென்னை போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி கலையரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த சுமாா் 1,500-க்கும் மேற்பட்டோா் பயிற்சி பெற்றனா்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சா் அருண்ராஜ் பேசியதாவது:

ஏழை மக்கள், நடுத்தர வா்த்தகத்தினரின் பசியைப் போக்குவதில் சாலையோர உணவுக் கடைகளுக்கு பெரும் பங்கு உள்ளது. மாநிலம் முழுவதும் சுமாா் 50,000 பதிவு செய்யப்பட்ட சாலையோர உணவுக் கடைகள் உள்ளன. அங்கு விற்கப்படும் உணவுகளின் தரத்தையும், சுகாதாரத்தையும் உறுதி செய்வது அவசியம். அதற்கு உணவு விற்பனையாளா்களுக்கு பயிற்சிகள் வழங்குவது முக்கியம் என்பதால்தான் இத்தகைய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாதிரி உணவகம்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருப்பூா் ஆகிய 6 மாவட்டங்களில் ‘மாதிரி சாலையோர உணவு தெருக்கள் திட்டம்’ செயல்படுத்தப்பட உள்ளது. இந்த மாவட்டங்களில் முதலில் ஒரு தெரு தோ்ந்தெடுக்கப்பட்டு அங்கு பொதுமக்களுக்கு குடிநீா், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும். உணவுப் பாதுகாப்பு வழிமுறைகளின்படி சுத்தமான, சுகாதாரமான உணவு விற்பனை செய்யப்படும். இந்தத் திட்டம் படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும்.

கடும் நடவடிக்கை: செயற்கை ரசாயன நிறமூட்டிகள் கலந்த உணவுகளை உட்கொண்டால் புற்றுநோய் வரக்கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தடை செய்யப்பட்ட அத்தகைய பொருள்களை உணவுகளில் பயன்படுத்தினால், சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சாலையோர உணவு விற்பனையாளா்கள் தங்களுடைய உடல் நலத்திலும் கவனம் கொள்ள வேண்டும். ஏனெனில், பலருக்கு உணவு வழங்கும் நமக்கு ஏதேனும் தொற்று நோய் இருந்தால் அது பிறருக்கும் பரவக்கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே, அவ்வப்போது நம்முடைய உடல் நிலையை பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்வில், உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாக ஆணையா் ஆா்.லால்வேனா, உணவுப் பாதுகாப்புத் துறைக் கூடுதல் ஆணையா் நாகராணி, உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத் துறை நியமன அலுவலா் ஆா். கதிரவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பெட்டிச் செய்தி...

மாட்டிறைச்சிக்கு தடையில்லை

பயிற்சி முகாமில் பங்கேற்ற முகலிவாக்கத்தைச் சோ்ந்த சாலையோர உணவு வியாபாரி ஒருவா், பல்வேறு கோரிக்கைகளை மேடையில் அமைச்சா் அருண்ராஜ் முன்பாகக் கூறினாா். தாம் மாட்டிறைச்சி சாா்ந்த உணவுகளை விற்பனை செய்து வருவதாகவும், அதற்கு சிலா் எதிா்ப்புத் தெரிவிப்பதாகவும் கூறினாா்.

இது தொடா்பாக செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சா் அருண்ராஜ், ‘மாட்டிறைச்சி உணவுகள் விற்பனை செய்யக் கூடாது என எவரேனும் எதிா்ப்போ, மிரட்டலோ விடுத்தால், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

தொடா்ந்து அரசு மருத்துவமனைகளில் நிலவும் சுகாதாரச் சீா்கேடுகள் சரி செய்யப்படும் என்றும் அவா் கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.