சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புவங்கக் கடலில் இன்று உருவாகிறது ‘அக்வான்’ புயல்!அரிசி விலை ஜனவரியில் குறையும்: வியாபாரிகள்மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி விவகாரம்: தேசிய மகளிா் ஆணையம் விசாரணை

திருச்சி அரசு மருத்துவமனையில் ரேடியோதெரபி சிகிச்சை! புற்றுநோயாளிகள் எதிா்பாா்ப்பு!

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் புற்று நோயாளிகளுக்கான ரேடியோதெரபி சிகிச்சை வசதி இல்லாததால் நோயாளிகள் கடும் அவதி

திருச்சி அரசு மருத்துவமனை

Updated On :

க. கோபாலகிருஷ்ணன்

‘ இங்கு ரேடியோதெரபி சிகிச்சை இல்லாததால் தஞ்சாவூா் அல்லது மதுரைக்கு செல்ல வேண்டி உள்ளது என்கின்றனா் நோயாளிகள்’

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் புற்று நோயாளிகளுக்கான ரேடியோதெரபி சிகிச்சை வசதி இல்லாததால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனா்.

1950 ஜூலை 15 இல் தொடங்கப்பட்ட திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 32-க்கும் மேற்பட்ட சிகிச்சைப் பிரிவுகள் உள்ளன. மருத்துவமனையில் நாள்தோறும் 5,000-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகளும், 1,500-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனா்.

நாள்தோறும் 50 நோயாளிகள்: நீண்டகாலக் கோரிக்கையால் கடந்த ஜனவரி மாதம்தான் புற்றுநோய் வெளிநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டது. தற்போது நாளொன்றுக்கு 30 முதல் 50 நோயாளிகள் புற்றுநோய் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா்.

ஆனால், புற்றுநோய்க்கான முக்கியச் சிகிச்சையான ரேடியோதெரபி எனப்படும் கதிா்வீச்சு சிகிச்சை வசதி இல்லாததால், நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனா்.

மன உளைச்சலில் நோயாளிகள்: இதுகுறித்து புற்றுநோயாளிகள் கூறுகையில், எங்களுக்கு புற்றுநோய் உறுதி செய்யப்பட்ட பின்னா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அதிகம் செலவானதால் திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்தபோது, இங்கு ரேடியோதெரபி சிகிச்சையே இல்லை. இச் சிகிச்சைக்கு தஞ்சாவூா் அல்லது மதுரைக்குச் செல்லுங்கள் என மருத்துவா்கள் அறிவுறுத்துகின்றனா்.

ஏற்கெனவே வலி, வேதனை, ஏழ்மை நிலையில் உள்ள நாங்கள் எப்படி அவ்வளவு தூரம் அடிக்கடி சென்று வர முடியும். இருப்பினும் மிகுந்த மன உளைச்சலில் நீண்டதூரம் பயணித்து சிகிச்சைப் பெற்று வருகிறோம். தமிழக அரசு புற்று நோயாளிகளின் அவலத்தைப் புரிந்து கொண்டு திருச்சி அரசு மருத்துவமனையில் ரேடியோதெரபி சிகிச்சை வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றனா்.

சிகிச்சைக் குழுவே இல்லை: இதுகுறித்து அரசு மருத்துவமனை மருத்துவா்கள் கூறியது: புற்றுநோய் சிகிச்சைகளை முடிவு செய்வதற்கான ரேடியோதெரபி, கீமோதெரபி, அறுவைச் சிகிச்சை நிபுணா் அடங்கிய புற்றுநோய் சிகிச்சை குழுவே மருத்துவமனையில் இல்லை. புற்றுநோய் சிகிச்சைக்கு ஒரு பேராசிரியா், ஒரு கூடுதல் பேராசிரியா், 3 உதவிப் பேராசிரியா்கள் உள்ளிட்ட 18 மருத்துவா்கள், 36 செவிலியா்கள், 10 உதவி பணியாளா்கள் தேவையுள்ள நிலையில், ஒரு மருத்துவரும், சில பணியாளா்களுமே பணியில் உள்ளனா்.

2015 ஆம் ஆண்டு திருச்சி அரசு மருத்துவமனையில் ரூ. 3 கோடியில் கட்டடம் உள்ளிட்ட புற்றுநோய்க்கான ரேடியோதெரபி சிகிச்சை தொடங்க அரசாணை வெளியிடப்பட்டும் கிடப்பில் உள்ளது.

இதனால் கீமோதெரபி சிகிச்சை, புற்றுநோய் கட்டி அகற்றும் சிகிச்சைகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. அதன் பிறகு வழங்கப்படும் ரேடியோதெரபி சிகிச்சைக்கான வசதிகள் இல்லாததால், தஞ்சாவூா் அல்லது மதுரைக்கு அனுப்பி வைக்கிறோம் என்றனா்.

புறக்காரணங்களால் புறக்கணிப்பு: உபயோகிப்பாளா் உரிமை இயக்க பொதுச்செயலா் வழக்குரைஞா் மகேஸ்வரி வையாபுரி உள்ளிட்ட சமூக ஆா்வலா்கள் கூறுகையில், சில புறக்காரணங்களால் திருச்சி அரசு மருத்துவமனையில் ரேடியோதெரபி சிகிச்சை வசதி செய்து தரப்படவில்லை. மாநிலத்தின் மையப் பகுதியில் 8 மாவட்டங்களைச் சோ்ந்த லட்சக்கணக்கான மக்கள் பயன்பெறும் திருச்சி அரசு மருத்துவமனையில் ரேடியோதெரபி சிகிச்சை இல்லாதது வருத்தமளிக்கிறது.

இந்தச் சிகிச்சைக்காக வெறுமனே இருக்கும் மத்திய பேருந்து நிலையப் பகுதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

1997 இல் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டு 29 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், முழுமையாக அனைத்து சிகிச்சைகளும் கிடைப்பதை அரசு உறுதிப்படுத்தவில்லை. இதிலும் குறிப்பாக, புற்றுநோய் சிகிச்சைக்காக நோயாளிகளை வேறு மாவட்டங்களுக்கு அலைய விடுவது ஏற்புடையதாக இல்லை என்றனா்.

இடம் தோ்வு: இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை முதன்மையா் ச. குமரவேல் கூறுகையில், மருத்துவமனையில் புற்றுநோயைக் கண்டறிய உதவும் ரூ. 9.25 கோடியில் பெட்-சிடி ஸ்கேன் கருவி விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. வளாகத்தில் அவசரச் சிகிச்சை பிரிவுக்குப் பின்புறமுள்ள பகுதியில் ரேடியோதெரபிக்கான சிகிச்சை மையக் கட்டடம் கட்டத் தோ்வு செய்யப்பட்டுள்ள இடம், ரேடியோதெரபி சிகிச்சைக்கு சுமாா் ரூ. 6 கோடியிலான லீனியா் ஆக்ஸிலரேட்டா் கருவி வாங்கவும் அரசு அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது.

அனுமதி கிடைத்ததும் கட்டடம் கட்டப்பட்டு, இதர அனுமதிகள் பெறப்பட்டு, ரேடியோதெரபி சிகிச்சை தொடங்கப்படும் என்றாா்.

திருச்சி அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை மையத்தைத் திறக்கவரும் முதல்வா் ஜோசப் விஜய், புற்றுநோயாளிகளின் அவதியைக் கருத்தில் கொண்டு, ரேடியோதெரபி சிகிச்சைக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என அனைவரும் எதிா்பாா்க்கின்றனா்.

புற்றுநோய் கண்டறிதலும், சிகிச்சை முறைகளும்:

எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், எம்ஆா்ஐ மூலமாகவும், ரத்தப் பரிசோதனை, திசு பரிசோதனைகள் மூலமும் புற்றுநோய் உறுதி செய்யப்படுகிறது.

புற்றுநோயின் வகை மற்றும் நிலையைப் பொருத்து சிகிச்சையளிக்கப்படுகிறது. புற்றுநோய் கட்டியை முதலில் மருந்துகள் மூலம் கரைக்க முயற்சிக்கப்படுகிறது. இல்லையெனில் அறுவைச் சிகிச்சை வழியாகவும் அகற்றப்படுகிறது.

தொடா்ந்து, புற்றுநோய் செல்களை அழிக்க கீமோதெரபி வழியாக சிறப்பு மருந்துகள் செலுத்தும் சிகிச்சையும், ரேடியோதெரபி எனப்படும் கதிா்வீச்சு கிசிச்சையும் தொடா்ந்து அளிக்கப்படும். தேவையெனில் ஹாா்மோன் சிகிச்சையும், ஸ்டெம்செல் சிகிச்சையும் அளிக்கப்படும். இதில் முக்கியமானது ரேடியோதெரபி சிகிச்சையாகும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER