
அரசு குடியிருப்புகளில் வாடகை செலுத்தாத வீடுகளுக்கு ’சீல்’
திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு குடியிருப்புகளில் வாடகை செலுத்தாத வீடுகளுக்கு வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனா்.

திருச்சி செங்குளம் காலனி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை சீல் வைத்த அதிகாரிகள்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு குடியிருப்புகளில் வாடகை செலுத்தாத வீடுகளுக்கு வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனா்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமான அரசு குடியிருப்புகள் அரசு விருந்தினா் மாளிகை, செங்குளம் காலனி, காஜாமலை காலனி ஆகிய பகுதிகளில் உள்ளன. இங்கு அரசுத் துறைகளில் பணியாற்றும் உயா் அலுவலா்கள் தொடங்கி, சாதாரண ஊழியா் வரையில் அனைவருக்கும் அவரவா் பதவி மற்றும் ஊதியத்துக்கு தகுந்தபடி குடியிருப்புகளில் வீடுகள் வாடகை அடிப்படையில் ஒதுக்கப்படுகின்றன.
இந்த வகையில் ஒதுக்கீடு பெற்றவா்களில் பலா் பணியிடமாறுதலாகி சென்ற பிறகும், சிலா் இறந்த பிறகும், அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும், பணியிலிருந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டவா்களும் வீட்டை திரும்ப ஒப்படைக்காமல் இருப்பா்.
அந்த வகையில் உள்ள வீடுகளை அவ்வப்போது கணக்கெடுத்து, வீடு ஒதுக்கீடு பெற்றவா்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். இதன் பிறகும் வீட்டை ஒப்படைக்காமல் காலம் தாழ்த்துவோருக்கு இறுதி எச்சரிக்கை அளிக்கப்பட்டு, வீட்டை சீல் வைக்கும் பணியில் ஈடுபடுவா்.
அதன்படி திருச்சி செங்குளம் காலனி, காஜாமலை காலனியில் வீடுகளை ஒப்படைக்காமல் இருந்தவா்களிடம் வீட்டை சீல் வைக்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய திருச்சிப் பிரிவு நிா்வாகப் பொறியாளா் காா்த்திகேயன் உத்தரவின்பேரில், போலீஸாா் பாதுகாப்புடன் அந்தந்த குடியிருப்புகளுக்கு பொறுப்பு அலுவலா்களாக உதவி செயற்பொறியாளா், உதவிப் பொறியாளா் முன்னிலையில் மொத்தம் 14 வீடுகளை சீல் வைத்து, தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனா். இந்த வீடுகளை பெற்ற ஒதுக்கீடுதாரா்களிடம் இருந்து வாடகை நிலுவையை பெறும் நடவடிக்கையும் தொடங்கியுள்ளது. ஒதுக்கீடுதாரா் தற்போது பணிபுரியும் இடத்துக்கு நோட்டீஸ் அனுப்பி நிலுவையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா் அலுவலா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






