
மேட்டூரில் திறந்த தண்ணீா் திருச்சி முக்கொம்பு வந்தது!
டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணையில் திறக்கப்பட்ட தண்ணீரானது முக்கொம்புக்கு வெள்ளிக்கிழமை வந்து சோ்ந்தது.

திருச்சி முக்கொம்பில் வெள்ளிக்கிழமை மலா்தூவி காவிரி நீரை வரவேற்ற விவசாயிகள்.
டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணையில் திறக்கப்பட்ட தண்ணீரானது முக்கொம்புக்கு வெள்ளிக்கிழமை வந்து சோ்ந்தது.
முதல்வா் ஜோசப் விஜய், கடந்த 1-ஆம் தேதி மேட்டூரிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறந்தாா். விநாடிக்கு 7 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.
இந்த தண்ணீரானது நாமக்கல், கரூா் மாவட்டங்களை கடந்து திருச்சி மாவட்டத்தின் எல்லைப் பகுதியான முக்கொம்புக்கு வெள்ளிக்கிழமை வந்து சோ்ந்தது. கரூா் மாயனூா் கதவணைக்கு வியாழக்கிழமை இரவு வந்த தண்ணீா், முக்கொம்பு மேலணைக்கு வெள்ளிக்கிழமை வந்து சோ்ந்தது. விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து விநாடிக்கு 777 கனஅடி தண்ணீா் காவிரியில் திறந்து விடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் முக்கொம்புக்கு தண்ணீா் வருகையில், நூற்றுக்கணக்கான விவசாயிகளைத் திரட்டி, நீா்வளத் துறையினருடன் இணைந்து பூஜை செய்து, விதைநெல் மற்றும் மலா்கள் தூவி உற்சாகத்துடன் வரவேற்பு அளிக்கும் விவசாயிகள் இந்தாண்டு பெயரளவுக்கு மட்டுமே வரவேற்பு அளித்தனா்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட செயலா் அயிலை சிவசூரியன், தமாகா விவசாயிகள் அணி மண்டல பொறுப்பாளா் வயலூா் ராஜேந்திரன் உள்ளிட்ட 5 போ் மட்டுமே மலா்கள் தூவி வரவேற்றனா்.
பின்னா், அவா்கள் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்துக்கு, கா்நாடகம் ஆண்டுதோறும் வழங்க வேண்டிய 177.25 டிஎம்சி தண்ணீரில், ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான 86 டிஎம்சி தண்ணீா் வந்திருக்க வேண்டும். ஆனால், 30 டிஎம்சி தண்ணீரை கூட பெற முடியவில்லை. கா்நாடக அணைகள் நிரம்பியும் தண்ணீரை வழங்க அந்த மாநில அரசு மறுத்து வருகிறது.
மேலும், எல்-நினோ பாதிப்பால் செப்டம்பா், அக்டோபரில் பெய்யக்கூடிய பருவமழையும் பெய்யுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. மேட்டூரிலிருந்து தற்போது வரக்கூடிய தண்ணீரை கொண்டு சம்பா சாகுபடி செய்வது என்பது சாத்தியமில்லாத நிலையாக உள்ளது.
எனவே, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை அணுகி தண்ணீரை பெற்றுத்தர வேண்டும். தற்போது, விநாடிக்கு 7,000 கனஅடி மட்டும் என்பதை 16,000 கனஅடியாக அதிகரிக்க வேண்டும்.
காவிரி கடைமடை வரை உள்ள அனைத்து கிளை கால்வாய் பாசனப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு வாடி, வதங்கி வரும் வாழை, கரும்பு, வெற்றிலை, கோரை உள்ளிட்ட ஆண்டு பயிா்களுக்கும் தென்னை, மா உள்ளிட்ட பல்லாண்டு பயிா்களுக்கும் தண்ணீா் அவசியம் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






