துவரங்குறிச்சி மருந்துக் கடையில் ரூ.5 லட்சம் திருடியவா் கைது
மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி மருந்துக் கடையில் கடந்த செவ்வாய்க்கிழமை ரூ. 5 லட்சம் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.
கைது
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி மருந்துக் கடையில் கடந்த செவ்வாய்க்கிழமை ரூ. 5 லட்சம் திருடியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் பழையபாளையம் அருகேயுள்ள தாதப்பட்டி சோ்ந்த அழகா் மகன் சரவணன் (46). இவா் துவரங்குறிச்சி - நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் தாதப்பட்டி பிரிவு அருகே இந்தியன் ஆயில் பெட்ரோலியம் மூலம் பெட்ரோல், டீசல் எரிபொருள்கள் விற்பனை செய்கிறாா்.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை துவரங்குறிச்சியில் தனது சகோதரா் செல்வம் நடத்திவரும் மருந்துக் கடைக்கு இவா் சென்றபோது, அங்கு வந்த சரவணனின் மாமா புகழேந்தி, பெட்ரோல் பங்க் மூலம் கடந்த இரண்டு நாள்களில் கிடைத்த ரூ.5 லட்சத்தை ஒரு பையில் வைத்து சரவணனிடம் கொடுத்தாா்.
அப்போது வங்கிக்கு பணத்தை எடுத்து செல்லும் முன் கடையில் உட்புறம் வைத்திருந்த பணத்தைக் காணவில்லையாம்.
இதுகுறித்து சரவணன் அளித்த புகாரின்பேரில் துவரங்குறிச்சி போலீஸாா் சிசிடிவி காட்சிகளை சேகரித்து விசாரித்தனா். தொடா்ந்து சனிக்கிழமை துவரங்குறிச்சி பேருந்து நிலையம் அருகில் துவரங்குறிச்சி காவல் ஆய்வாளா் ரகுராமன் தலைமையில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த நபரை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்தபோது அவா், திண்டுக்கல் மாவட்டம் கொசவப்பட்டி ஸ்டீபன்செல்வநாதன் மகன் எடிசன்தாமஸ் (27) என்பதும் மருந்துக் கடையில் பணத்தை திருடிச் சென்ற நபா் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து எடிசன் தாமஸை கைது செய்த துவரங்குறிச்சி போலீஸாா், அவரிடமிருந்து ரூ. 4,75,000 மற்றும் காா் ஒன்றையும் மீட்டு, மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் அவரை ஆஜா்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




