
மணப்பாறை அருகே சாலையை சீரமைக்கக் கோரி போராட்டம்
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே சாலையை சீரமைக்க வலியுறுத்தி பொய்கைப்பட்டியில் கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மணப்பாறை அருகே சாலை மறியலில் புதன்கிழமை ஈடுபட்ட கிராம கிராம மக்கள்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே சாலையை சீரமைக்க வலியுறுத்தி பொய்கைப்பட்டியில் கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மணப்பாறையை அடுத்த பொய்கைப்பட்டியிலிருந்து பொடங்குப்பட்டி வரையிலான சுமாா் 7கிமீ தொலைவுக்கான தாா்ச் சாலை கடந்த 2001-2002 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டு பின் 2012 ஆம் ஆண்டில் ஆங்காங்கே சீரமைக்கப்பட்டது. அதன்பின் 12 ஆண்டுகளாகச் சீரமைக்காமல் குண்டும் குழியுமாக உள்ளது.
இச்சாலை மணப்பாறை - மருங்காபுரி இரு ஒன்றியங்களையும், இரு தாலுகாக்களையும் இணைக்கும் பிரதான சாலையாகும். இச்சாலை வழியாக பொய்கைப்பட்டி, ஆவிக்காரப்பட்டி, சமூகநீதி குடியிருப்பு, திருமலையான்பட்டி, வலையப்பட்டி, சாம்பட்டி, ஆனாம்பட்டி, அடைக்கம்பட்டி, பொடங்குப்பட்டி ஆகிய கிராம மக்கள் தினமும் ஆயிரக்கணக்கானோா் வாகனங்களில் பயணிக்க வேண்டிய நிலையில் உள்ளனா்.
மோசமான சாலையால் வாகன ஓட்டிகளும் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்குச் செல்வோா் அல்லல்படுவதாகத் தெரிவிக்கும் அப்பகுதிவாசிகள், இதுகுறித்து பலமுறை ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்திற்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த சாம்பட்டி, திருமலையான்பட்டி, ஆவிக்காரன்பட்டி கிராம மக்கள் முன்னாள் ஊராட்சித் தலைவா் ராஜேந்திரன் தலைமையில் புதன்கிழமை மணப்பாறை - மதுரை சாலையில் பொய்கைப்பட்டி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து முடங்கியது. தகவலறிந்து சென்ற போலீஸாா் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






