ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

அலங்கார அக்கறை மேம்பாலத்துக்கு வருமா?

 வேலூர், அக்.1: அலங்கார, வரவேற்பு வளைவுகள் உள்ளிட்டவற்றை அமைப்பதில் அதீத அக்கறை கொள்ளும் மக்கள் பிரதிநிதிகள், மக்களின் அத்தியாவசியத் தேவையை நிறைவேற்றுவதில் கொஞ்சமாவது அக்கறை காட்ட வேண்ட

Updated On :20 செப்டம்பர் 2012, 3:58 pm

 வேலூர், அக்.1: அலங்கார, வரவேற்பு வளைவுகள் உள்ளிட்டவற்றை அமைப்பதில் அதீத அக்கறை கொள்ளும் மக்கள் பிரதிநிதிகள், மக்களின் அத்தியாவசியத் தேவையை நிறைவேற்றுவதில் கொஞ்சமாவது அக்கறை காட்ட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

 வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே சாலையைக் கடப்பதற்கு பொதுமக்கள் பல்வேறு சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதைப் புரிந்து கொண்டு உதவ முன்வராத மக்கள் பிரதிநிதிகள், அலங்கார நினைவு வளைவு அமைப்பதில் அக்கறை கொண்டுள்ளது வேதனை அளிக்கிறது என்று பொதுமக்கள் குமுறுகின்றனர்.

 வேலூர் புதிய பஸ் நிலையத்துக்குள் தினசரி 1000-க்கும் மேற்பட்ட முறை பேருந்துகள் வந்து செல்கின்றன. ரவுண்டானாவிலிருந்து சில அடி தூரத்திலேயே பேருந்துகள் நுழைவிடம் அமைந்துள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்பதற்காக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பஸ் நிலையத்தை ஒட்டியுள்ள சாலை அகலப்படுத்தப்பட்டது.

 மொத்தமுள்ள மூன்று வழிச்சாலையில், இரண்டில் பேருந்துகள் தற்போது ஆக்கிரமித்து நிற்கின்றன. ஒரு வழிச் சாலையிலேயே மற்ற அனைத்து வாகனங்களும் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், பஸ் நிலையம் முன்னும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

 மேலும், பஸ் நிலையம் முன் பயணிகளை இறக்கிவிடும் ஆட்டோக்கள், பஸ் நிலையத்தை ஒட்டியுள்ள செல்லியம்மன் கோயில் முன் மறுபக்கச் சாலைக்கு திரும்புகின்றன. இதனால், பின்னால் வரும் வாகனங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

 இப் பிரச்னையைத் தீர்க்க, செல்லியம்மன் கோயிலைக் கடந்து, இடதுபக்கமாக பாலாற்றுக்குள் இறங்கி, அதன் முதல் தூணுக்கு அடியில் திரும்பி, வலதுபக்கம் உள்ள அம்பேத்கர் சிலையையொட்டி, மேல் பக்கச் சாலைக்கு வரும் வகையில் பாதை அமைக்கக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திட்டமிடப்பட்டது. ஆனால், அத் திட்டம் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது.

 இதனால், வேறு வழியின்றி, பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வரும் பொதுமக்கள் அதிகமானோர் போக்குவரத்து நெரிசலுக்கு இடையே, சாலையைக் கடக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இவ்வாறு கடப்பதால், ரவுண்டானா வளைவிலிருந்து வரும் வாகனங்கள் பார்வையில் படுவதில்லை. இதனால், விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இங்கு போக்குவரத்துக் காவலர்கள் பணியில் இருந்தாலும், வாகன நெரிசல் நீடிக்கவே செய்கிறது.

 பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வரும் வேளையில், பஸ் நிலையத்தில் நினைவு வளைவு அமைப்பதில் மாநகராட்சி மேயரும், சட்டப்பேரவை உறுப்பினரும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

 ரூ.7 லட்சம் செலவில் எம்எல்ஏ சி.ஞானசேகரன் அமைக்கும் நினைவு வளைவுப் பணியை நிறுத்திய மேயர் ப.கார்த்திகேயன், அங்கு அண்ணா நினைவு வளைவு அமைக்க மாநகராட்சி முயற்சிப்பதாகத் தெரிவித்திருந்தார்.

 இந் நிலையில் இப்போது, எம்எல்ஏ சி.ஞானசேகரன் அமைக்கவுள்ள நினைவு வளைவுக்கு அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

 நினைவு வளைவு அமைக்கும் இந் நிதியில், பொதுமக்கள் சாலையைக் கடக்க வசதியாக நடை மேம்பாலம் அமைக்க மக்கள் பிரதிநிதிகள் முன்வர வேண்டும்.

 வேலூர் மா.பா.சாரதி மாளிகைப் பகுதியில் உள்ளது போன்று பதிய பஸ் நிலையம் பகுதியில் நடை மேம்பாலம் அமைக்க, அலங்கார வளைவில் அக்கறை கொண்டுள்ள சட்டப் பேரவை உறுப்பினர் சி.ஞானசேகரன் முன்வர வேண்டும்

 என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு!.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.