கிருஷ்ணகிரி, ஆக.26: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்ட பயனாளிகளுக்கு ஆன்-லைன் மூலம் பணப் பட்டுவாடா செய்யும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இந்திராகாந்தி ஓய்வூதியத் திட்டம், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கூலி விவசாயிகள் ஓய்வூதியத் திட்டம், முதிர்கன்னிகள் உதவித்தொகை உள்பட 8 திட்டங்களின் பயனாளிகளுக்கு கிராமத்தில் உள்ள அஞ்சலகம் மூலம் பணம் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது.
இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை, தேன்கனிக்கோட்டை, ஒசூர், கிருஷ்ணகிரி மற்றும் போச்சம்பள்ளி ஆகிய 5 வட்டங்களில் மாதம் குறைந்தது 81,824 பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர்.
இத்தொகைகளை பண அஞ்சல் செய்ய மாவட்ட நிர்வாகத்துக்கு ஆண்டுக்கு பல லட்சம் ரூபாய் செலவாகிறதாம். மேலும் பயனாளிகளுக்கு உதவித்தொகை தாமதமாக கிடைப்பதாகவும், இத்திட்டத்தின் பயன் போலி பயனாளிகளுக்கு செல்வதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. மேலும் பயனாளிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதா என சரிபார்ப்பதிலும் சிரமம் உள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில், திட்டப் பயன்கள் உண்மையான பயனாளிகளுக்கு செல்வதை கண்காணிக்கவும், பண அஞ்சல் செலவை தவிர்க்கும் வகையிலும், 5-ம் தேதிக்குள் பயனாளிகளுக்கு உதவித் தொகை கிடைக்கும் வகையிலும் ஆன்-லைன் மூலம் பணம் பட்டுவாடா செய்யும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதற்கட்டமாக மாவட்டத்தில் ஒசூர் மற்றும் ஊத்தங்கரை வட்டங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் பயனாளிகளின் பட்டியல்களை சரிபார்த்து வருகின்றனர்.
இப்பணி முழுமையடைந்ததும், இப்பட்டியல் குறுந்தகட்டில் பதிவு செய்யப்பட்டு தலைமை தபால் நிலையத்துக்கு வழங்கப்படும். அதனுடன் சேர்த்து வரைவோலையும் வழங்கப்படும்.
தலைமை தபால் நிலையம் அந்த பட்டியல் படி பணத்தை கிராம தபால் நிலையங்கள் மூலம் பயனாளிகளுக்கு பட்டுவாடா செய்யும்.
இந்த நடைமுறையால், குறிப்பிட்ட தேதிக்குள் பயனாளிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதா, எத்தனை பயனாளிகளுக்கு பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது போன்ற விவரங்களை மாவட்ட நிர்வாகம் கணினி மூலம் உடனே தெரிந்துகொள்ளும். வரும் மாதம் முதல் வெள்ளோட்டமாக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தபால்துறை ஊழியர்கள் தெரிவித்தனர்.
இத்திட்டம் சிறப்பாக செயல்பட்டால் கூடுதல் விவரங்களாக பயனாளிகளின் புகைப்படம் மற்றும் கைரேகையும் பதிவு செய்யப்படும். இதனால் போலி பயனாளிகளை தடுக்க முடியும் என்கின்றனர் வருவாய்த் துறையினர்.
எற்கெனவே இத்திட்டம் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.