மலையைத் தாங்கிய மாலவன்
தீயோரை அழித்து, நல்லோரைக் காக்க தன்னையே மீண்டும் மீண்டும் படைத்துக் கொள்ளும் தகைமையாளர் திருமால். இவரது தசாவதாரங்களில் தன் தனிப் பெருங்கருணையை விதம், விதமாய் வெளிப்படுத்திய அழகை எங்ஙனம் வர்ணிக்க இயலும


தீயோரை அழித்து, நல்லோரைக் காக்க தன்னையே மீண்டும் மீண்டும் படைத்துக் கொள்ளும் தகைமையாளர் திருமால். இவரது தசாவதாரங்களில் தன் தனிப் பெருங்கருணையை விதம், விதமாய் வெளிப்படுத்திய அழகை எங்ஙனம் வர்ணிக்க இயலும்? அது நமக்கெல்லாம் சாத்தியப்படக்கூடிய செயலும் அல்ல. பொதுவாக இறைவனின் அவதாரங்களில் "தீயோரை ஒடுக்குதல்! நல்லோரை ரட்சித்தல்' என்ற இரண்டு குறிக்கோள்களே மேலோங்கிருந்தாலும், திருமாலின் ஒரு அவதாரத்தில் மட்டும்தான் "அழிப்பது' என்ற நோக்கமே இல்லாமல், "காப்பது' என்ற ஒரே நோக்கம் மட்டுமே குடிகொண்டிருந்தது. அதுதான் "கூர்ம அவதாரம்' என்று சிறப்பித்துக் கூறப்படுவது. தசாவதாரங்களில் இது இரண்டாவது அவதாரம்.
தேவர்களும், அசுரர்களும் அமுதம் கிடைப்பதற்காக மந்தர மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் பயன்படுத்தி பாற்கடலைக் கடைந்தார்கள். அந்த மந்தர மலை கடலில் அமிழ்ந்து மூழ்காமல் இருக்க பகவான் மஹாவிஷ்ணு, கூர்ம (ஆமை) வடிவம் எடுத்து, தன்னுடைய முதுகில் மலையைத் தாங்கினார்.
இந்த அவதாரம் எடுத்ததற்கான வேறு ஒரு காரணமும் உண்டு. ஒரு சமயம் துர்வாஸ முனிவர், தனக்கு திருமகளின் அனுக்கிரஹத்தால் கிடைக்கப் பெற்ற ஒரு பூமாலையை தேவேந்திரனுக்கு ஆசீர்வதித்துக் கொடுத்தார். இந்திரனோ அதை அலட்சியமாகத் தன் யானையின் தலையில் வைத்தான். யானையோ அந்த மாலையை எடுத்துக் கீழே போட்டு தன் காலால் மிதித்தது. இதனால் கோபம் கொண்ட துர்வாசர் இந்திரனை நோக்கி, ""நீ ஆணவத்தால் இவ்வாறு செய்ததால் உன் செல்வங்களையெல்லாம் இழந்து போவாய்'' என்று சாபமிட்டார். அதைக் கேட்டு கலங்கிய தேவேந்திரன், தன் பரிவாரங்களுடன் திருப்பாற்கடலையடைந்து திருமாலை சரணடைந்தான். பரிவு கொண்ட திருமால், ""மந்தர மலையை மத்தாக்கி, வாசுகி என்ற பாம்பினைக் கயிறாக்கி திருப்பாற்கடலை கடைந்தால் நீ இழந்த செல்வங்களை அடைவாய்'' என்று நம்பிக்கை கொடுத்தார். அவ்வாறே பாற்கடலைக் கடைய ஏற்பாடு செய்யப்பட்டது என்பதும் ஒரு வரலாறு. இனி இந்த அவதாரச் சிறப்பினை எவ்வாறு அருளாளர்கள் அனுபவித்துப் பாடியுள்ளார்கள் என்று பார்ப்போம்.
திருமாலின் "சார்ங்கம்' என்னும் வில்லின் அம்சம் பொருந்தியவர் எனக் கருதப்பட்டவர் திருமங்கையாழ்வார். அவர் திருக்கண்ணபுரத்து சௌரிராஜப் பெருமாளை நோக்கி தனது "மலங்கு விலங்கு' என்று தொடங்கும் பாசுரத்தில், ""மீன்கள் தடுமாறும்படியான வெள்ளத்தில் கலங்கிய நீரில் மலையை நட்டு, அமுதம் தோன்றும் வரையில் ஆமையாய் இருந்த ஆச்சரியமான பெருமானை, கடல் அருகே இருக்கின்ற திருக்கண்ணபுரத்தில் கண்டேனே...'' என்ற பொருள் படும் படி பாடியுள்ளார்.
ஸ்ரீஜெயதேவ சுவாமிகளின் கீத கோவிந்த மகா காவியம் பன்னிரெண்டு சர்க்கங்களை (24 அஷ்டபதிகள்) கொண்டது. முதல் அஷ்டபதியில் பகவானுடைய பத்து அவதாரங்கள் வர்ணிக்கப்படுகின்றன. அதில் "கேசவ! த்ருத கச்சப ரூப!' என்று வர்ணிக்கின்றார். கச்சபம் என்றால் ஆமைக்குச் சொல்லப்படும் மற்றொரு பெயர்.
"மந்தரோத்தார கூர்மம்' என்று நாராயண பட்டத்தரி தனது ஸ்ரீமந் நாராயணீய காவியத்தில் 100வது ஸ்லோகத்தில் வர்ணித்துள்ளார். அந்த வர்ணனையைச் சற்று ரசிப்போம். தனது வாதநோய் முற்றிலும் நீங்கப் பெற்று, குருவாயூரப்பனை நேரில் தரிசனம் கண்ட அனுபவத்தில், தான் கண்ட காட்சியினை, ""உமது பாதங்கள் "என் திருவடி சேவைதான் எல்லா நன்மைகளுக்கும் காரணம்' என்று பக்தர்களிடம் கூறுவதுபோல் ஒலிக்கின்றன. உம்மை வணங்கும் பக்தர்களின் மனம், மந்தர மலை போல் உள்ளது. அது அஞ்ஞானக் கடலில் மூழ்கி இருக்கிறது; அதைக் கூர்மாவதாரம் செய்து உயரத் தூக்குவது போல் உமது நுனிக்கால்கள் ஆமையைப் போல் வடிவு பெற்றிருக்கின்றன. உமது பாதங்களின் நகங்கள் உயர்ந்து சிவந்து, வெண்ணிலவுபோல் ஒளிவிடுகின்றன. அந்த நிலவு தம்மை வந்தடைந்தவர்களின் தாபங்களையும், அஞ்ஞானத்தையும் போக்குகிறது'' என்று வர்ணிக்கின்றார்.
தமிழ்நாட்டின் பெருமைமிக்க பெண்டிர் ஞானிகளில் ஒருவரும், திருவிசநல்லூர் ஸ்ரீதர ஐயாவாளின் பரிபூரண அருளாசியும் பெற்றவருமான செங்கோட்டை ஆவுடை அக்காள், தனது பாடலில் கண்ணபிரான் அர்ச்சுனனுக்கு விசுவரூபக் காட்சி நல்கிய விதத்தை விவரிக்கின்றார். அந்த விசுவரூப தரிசனத்தில் அர்ச்சுனன் தசாவதாரக் காட்சியைக் கண்டு களித்ததை, ""பாற்கடலை அந்நாள் பரிவாகவே யடைந்து தேவாசுரர் கடைந்து தெள்ளமுதம் கொள்ளுகைக்கு மந்தர பர்வதத்தை மத்தாகவே நட்டு வாசுகியை நல்ல மணிக்கயிறாப் பூட்டியதில்
வலித்துக் கடைகையிலே மண்ணின் புறங்குழிந்து உள்ளழுந்திப் போக அந்த ஓங்குமலை மேலுயர்த்தி
வன் முதுகில் தாங்கி வளமா நிறுத்துமந்தக்
கூர்மாவதாரமும் கண்டு குளிர்ந்திருந்தான்''
என்று அழகுபட வர்ணிக்கின்றார்.
கூர்ம வடிவில் எம்பெருமான் ஆந்திர மாநிலத்தில் உள்ள "ஸ்ரீகூர்மம்' என்ற திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கிறார். அவதாரத்தின் பெயரிலேயே திகழும் அற்புதத் திருத்தலம் இது. எம்பெருமானின் (ராமாநுஜர்) அபிமானத் தலங்கள் பதினாறில் ஸ்ரீகூர்மம் ஒன்று. பூரி ஜகந்நாதப் பெருமாள், கருடாழ்வார் மூலம் ராமானுஜருக்கு வழிகாட்டிய பெருமை உடையது. திருமுகமும், முதுகு ஓடுமாக ஆமை வடிவத்திலே கருவறையில் இறைவன் குடிகொண்டுள்ளார். ஆதி சங்கரர் அளித்த சுதர்சன சாளக்ராமம் கூர்மத்தின் நெஞ்சில் சாத்தப்பட்டுள்ளது. பகவான் அவதரித்த கூர்மமே படிமமாக இருப்பதாகக் கருதப்படுகிறது. இங்கே தாயார் திருநாமம் ஸ்ரீ கூர்ம நாயகி. உற்சவ மூர்த்திகளாக சீதா, ராமச்சந்திரமூர்த்தி அருள் புரிகின்றார்கள். கல்வெட்டுச் சான்றுகள் 12ம் நூற்றாண்டில் இவ்வாலயம் கட்டப்பட்டதைப் பறை சாற்றுகின்றன. புஷ்கரணி, ஸ்வேத புஷ்கரணி. (ஸ்வேதம் என்றால் வெண்மை என்று பொருள். பாற்கடல் வெண்மை நிறம் கொண்டது என்பார்கள்). மகான்கள், மன்னர்கள் சிறப்பித்து வழிபாடு நடத்திய இடம். ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கோலம் பூண்டு காணும் இந்த திருத்தலத்தில் வரும் ஜூலை 8ஆம் தேதி (ஜேஷ்ட பகுள துவாதசி) வியாழனன்று ஸ்ரீ கூர்ம ஜெயந்தி விழா, விசேஷ திருமஞ்சனம் மற்றும் பூஜைகளுடன் பாஞ்சராத்ர ஆகம விதிப்படி சிறப்பாக நடைபெறுகிறது. "இத்திருத்தலத்தில் உள்ள திருக்குளத்தில் நீராடி கூர்மநாதரை வழிபடுபவர்கள், அஸ்வமேத யாகம் செய்த பலனைப் பெறுகிறார்கள்' என்று புராணங்கள் இயம்புகின்றன.
ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் ஸ்ரீகாகுளத்திலிருந்து 13 கி.மீ. தொலைவிலும், விசாகப்பட்டினத்திலிருந்து 130 கி.மீ. தூரத்திலும் உள்ளது இத்திருத்தலம். வால்டேர் - கல்கத்தா ரயில் மார்க்கத்தில், ஸ்ரீகாகுளம் ரோட் என்ற ரயில் நிலையத்திலிருந்தும் செல்லலாம். ஸ்ரீ கூர்ம ரூபிக்கு என்று பிரத்யேகமாக அமைந்துள்ள இத்திருத்தலத்தைப் பற்றியும், இவ்வாலயத்தில் நடைபெறும் உற்சவ தினங்களைப் பற்றியும் அறிய விரும்புவோர் ஆலய பட்டாச்சாரியார் முரளிகிருஷ்ணாவை செல் எண் 9949731200ல் தொடர்பு கொள்ளலாம்.
ஸ்ரீ வேதாந்த தேசிகர், ஸ்ரீரங்கம் வட காவேரிக் கரையில் திருமங்கை மன்னனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள தசாவதார மூர்த்திகளைத் துதி பாடி, ஒவ்வொரு அவதாரத்திற்கும் ஒரு பலன் உண்டு என்று சொல்லுகிறார். அதில் "ஸ்ரீ கூர்ம அவதாரத்தை நாம் துதித்துப் பாடுங்கால் சனி தசையினால் ஏற்படும் துன்பங்கள் விலகும்' என்று அருளியுள்ளார். "பகவான் கூர்மமாக அவதரித்து மந்தர மலையைத் தாங்கிய சரிதம் சொல்பவர்கள், கேட்பவர்கள் தங்கள் முயற்சியில் வெற்றியடைவர்' என்றும், "அவர்களது துன்பங்களும், சிரமங்களும் சூரியனைக் கண்ட பனிபோல் நீங்கும்' என்றும், "கிரக தோஷங்கள் போக்க வல்லது' என்றும் ஸ்ரீமத் பாகவதம் கூறுகின்றது.
பொதுவாக "ஆமை புகுந்த வீடு கேடு விளைவிக்கும்' என்று ஒரு தவறான எண்ணம் நம்மிடையே நிலவுகிறது. ஆனால் உண்மையான தகவல் என்னவென்றால், நம் மனதில் பொறாமை என்ற ஆமையைத்தான் புக விடக்கூடாது; அதனால் ஏற்படும் இன்னல்களுக்கு இடம் கொடுக்கக்கூடாது என்பதுதான் அப்பழமொழியின் உண்மைப் பொருள். "பொறாமையை முக்கியமான குற்றமாகக் கருதி, அதை வெளியேற்றுவதைத் தவமாக மேற்கொள்ளவேண்டும்' என்பார் வள்ளுவப் பெருந்தகை.
இந்த கூர்ம அவதாரம் மூலம் பகவான் நமக்கு உணர்த்துவது யாதெனில், "வாழ்க்கையில் பொறுமை, நிதானம் போன்றவற்றைக் கடைபிடித்து ஒழுக வேண்டும்' என்பதே. மேலும், "ஆபத்து வரும்போது ஆமையானது எவ்வாறு தன் அவயங்களைத் தன் ஓட்டுக்குள் அடக்கிக் கொள்கிறதோ அதுபோல் ஒருவன் அறிவாகிய ஓட்டுக்குள் பொறிகளை அடக்கிக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தால் அவனுடைய ஞானம் உறுதியாகிறது' என்ற ஒரு உயர்ந்த தத்துவத்தையும் போதிக்கின்றார். இந்தத் தன்மையையும் திருவள்ளுவர் பாடியுள்ளார்.
கூர்ம அவதாரத்தில் தன் முதுகில் மந்தர மலையைத் தாங்கியவனும், கிருஷ்ண அவதாரத்தில் தனது சுண்டுவிரலில் கோவர்த்தன மலையைத் தாங்கியவனுமான அந்த மாலவனை துதித்து அவன் திருவடியை வணங்கினால், நமக்கு மலைபோல் வரும் துன்பங்கள் நீங்கப் பெற்று பெரு வாழ்வு வாழலாம் என்பது திண்ணம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...