குடியாத்தம், ஜன. 31: பேர்ணாம்பட்டு அடுத்த தரைக்காட்டில் அடிப்படை வசதிகளோ, ஆரம்பப் பள்ளியோ இல்லை. இதனால், சுகாதாரம், கல்வி வசதிகளின்றி அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர்.
பேர்ணாம்பட்டு நகராட்சிக்குள்பட்ட தரைக்காடு எனும் பகுதி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. சுமார் 1,500 முஸ்லிம் குடும்பங்கள் இங்கு வசிக்கின்றன. இவர்களில் பெரும்பாலோனோர் பீடி சுற்றும் தொழில் செய்கின்றனர். எஞ்சியவர்கள் தோல் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களாகப் பணிபுரிகின்றனர்.
குடிநீர், சாலை, தெருவிளக்கு, கழிவறை, கழிவுநீர்க் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரிவர செய்து தரப்படவில்லை என்று இப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால், அப்பகுதி சுகாதாரமற்று காணப்படுகிறது.
400 சிறுவர்கள் இருந்தும் பள்ளி இல்லை!
இப்பகுதியில் 14 வயதுக்கு குறைவான சுமார் 400-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உள்ளனர்.
மலையடிவாரத்தில் இப்பகுதி அமைந்துள்ளதால், இவர்களுக்கு போதிய விழிப்புணர்வும் இல்லை.
தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் தெளிவும் இல்லை.
அங்கிருந்து ஆண்கள் உருது தொடக்கப் பள்ளி சுமார் 1 கி.மீ. தூரத்திலும், பெண்கள் உருது தொடக்கப் பள்ளி சுமார் 2 கி.மீ. தூரத்திலும் உள்ளன. இப்பள்ளிகளுக்குச் செல்ல போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் குண்டும், குழியுமாக உள்ள சாலையில் தான் செல்ல வேண்டும். வழியில் தேசிய நெடுஞ்சாலையையும் கடக்க வேண்டும்.
இதனால் பெரும்பாலானோர் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து வருகின்றனர்.
சிறுவர்கள் நாள்தோறும் வெறுமனே சுற்றித் திரிவதால், அவர்களின் எதிர்கால வாழ்வு கேள்விக் குறியாக மாறியுள்ளது.
அங்கன்வாடியை தரம் உயர்த்தலாமே!
1 கி.மீ. சுற்றளவில் பள்ளியில்லாத இடங்களிலும், குறைந்தபட்சம் 500 மக்கள்தொகை உள்ள இடங்களிலும், பள்ளி செல்லும் வயதில் 50 சிறுவர்கள் இருந்தாலும் அங்கு தொடக்கப் பள்ளி தொடங்கலாம் என அரசு விதி உள்ளது.
தரைக்காட்டில் கடந்த 9 ஆண்டுகளாக 2 அங்கன்வாடிகள் இயங்கி வருகின்றன.
ஒரு இடத்தில் அங்கன்வாடி தொடங்கினால் அது 3 ஆண்டுகளில் தொடக்கப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட வேண்டும் எனவும் அரசு விதி உள்ளது. இந்த விதிகள் இந்த பகுதிக்கு ஏன் பொருந்தவில்லை என்ற கேள்வியும் அப்பகுதி சமூக ஆர்வலர்கள் எழுப்புகின்றனர்.
இங்கு அடிப்படை வசதிகளோடு செய்து தருவதோடு, தொடக்கப் பள்ளியும் தொடங்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.