பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

சொல்லியிருக்கிறார்கள்; செய்யவில்லை ரூ.16 லட்சம் எங்கே?

அரக்கோணம், ஜூலை 10: சயனபுரம் ஊராட்சியில் செய்து முடிக்கப்பட்டுள்ள பணிகள் குறித்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி பெறப்பட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ள ரூ.16 லட்சத்துக்கான பணிகள் இதுவரை தொடங்கப்படவ

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 9:35 pm

எஸ்.சபேஷ்

அரக்கோணம், ஜூலை 10: சயனபுரம் ஊராட்சியில் செய்து முடிக்கப்பட்டுள்ள பணிகள் குறித்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி பெறப்பட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ள ரூ.16 லட்சத்துக்கான பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை என்கின்றனர் கிராம மக்கள்.

அரக்கோணத்தை அடுத்த நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பெரிய ஊராட்சியான சயனபுரம் ஊராட்சியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள கடந்த சில ஆண்டுகளில் உட்கட்டமைப்பு நிதி, உட்கட்டமைப்பு இடைவெளி நிரப்புதல் மானிய நிதி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட நிதி, வாட்சன் நிதி, பொதுநிதி, வறட்சி நிவாரண நிதி, சட்டப்பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதி ஆகிய நிதிகளில் இருந்து சுமார் ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்நிதிகளிலிருந்து அடிப்படை வசதிகள் சரிவர செய்துத் தரப்படவில்லை என்றும் பணிகள் நடைபெற்றுள்ளதாக ஏட்டளவில் பதிவேடுகளில் எழுதப்பட்டு, அப்பணியை செய்யவில்லை என்றும் கிராம மக்கள் புகார் தெரிவித்துவருகின்றனர்.

கேள்வி கேட்டால் பதில் இல்லை!

இதுகுறித்து ஊராட்சி மன்றக் கூட்டத்தில் பலமுறை கேள்விகள் எழுப்பியும், பணிகள் குறித்து ஊராட்சி உதவியாளர் பதிலளிக்காமல் கூட்டத்திலிருந்து வெளியேறி விடுவதாக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக ஊராட்சி உதவியாளர் மீது நடவடிக்கை கோரி ஊராட்சி மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர் அண்மையில் விசாரணை நடத்தியுள்ளதாகவும் கிராம மக்கள் கூறுகின்றனர்.

ஊராட்சி உதவியாளர் மீது புகார்!

இந்த விசாரணை முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.கணபதி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய கடிதத்தில், "ஊராட்சி மன்றக் கூட்டத்தில் நடைபெற்ற அவமதிப்பு சம்பவங்களுக்காக சமரச நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதில், ஊராட்சி மன்றத் தலைவர், உறுப்பினர்கள், ஒன்றியக் குழு முன்னாள் தலைவர், பொதுமக்கள் ஆகியோர் ஊராட்சி உதவியாளர் வடிவேல் மாற்றம் செய்யப்பட வேண்டும் என உறுதியாக உள்ளதாகவும், சயனபுரம் ஊராட்சி உதவியாளர் மாற்றப்பட்டால், ஊராட்சி உதவியாளர் சங்கம் போராட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவித்து வருகிறார்' என்று கூறியுள்ளார்.

விசாரணை நடத்த வேண்டும்!

இந்நிலையில், இந்த ஊராட்சியில் நடைபெற்றுள்ள பணிகள் குறித்து கிராம மக்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் விவரம் கேட்டுள்ளனர்.

இதற்கு ஊராட்சி ஒன்றிய தகவல் அலுவலர் பூங்காவனம் அளித்துள்ள பதிலில், எம்.எல்.ஏ. நிதியில் மேற்கொள்ளப்பட்ட பணிகளான சயனபுரம் ஊராட்சி மயானத்தின் கிழக்கு பகுதியில் சுற்றுச்சுவர் கட்டுதல் பணி ரூ.3.50 லட்சம், முஸ்லிம் சுடுகாட்டுக்கு சுற்றுசுவர் கட்டுதல் பணிக்கு ரூ.6 லட்சம், காரிய மேடை அமைக்க ரூ.3.50 லட்சம், மின்மோட்டார், பைப்லைன் விஸ்தரிப்பு, ஆழ்துளை கிணறு அமைத்தல் பணிகளுக்கான ரூ.3 லட்சம் ஆகிய பணிகள் முடிக்கப்பட்டுள்ளது' என தெரிவித்துள்ளார்.

"மேற்கண்ட இப்பணிகள் இன்று வரை தொடங்கப்படவே இல்லை. ஒதுக்கப்பட்ட நிதி என்ன ஆயிற்று, ஏன் பணிகள் நடைபெறவில்லை என விசாரணை நடத்தி, இதற்குக் காரணமானோர் மீது நடவடிக்கை எடுத்து, அப்பணிகளைத் தொடங்க வேண்டும்' என்கின்றனர் கிராம மக்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.