மந்தகதியில் திண்டிவனம் - நகரி ரயில்பாதை திட்டம்

ஆரணி, ஏப். 14: ஆரணி வழியாகச் செல்லும் திண்டிவனம்-நகரி ரயில்பாதைத் திட்டம் மந்தகதியில் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலேயே அதிக வருவாய் கொண்ட நகரமாக ஆரணி விளங்குகிறது. பட்டு சேலைக
Updated on
1 min read

ஆரணி, ஏப். 14: ஆரணி வழியாகச் செல்லும் திண்டிவனம்-நகரி ரயில்பாதைத் திட்டம் மந்தகதியில் நடப்பதாக புகார் எழுந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்திலேயே அதிக வருவாய் கொண்ட நகரமாக ஆரணி விளங்குகிறது. பட்டு சேலைக்கும், அரிசிக்கும் புகழ் பெற்றதாகவும் இந்நகரம் உள்ளது. ஆனால் ஆரணிக்கு ரயில் போக்குவரத்து இல்லை.

வர்த்தகர்கள் சங்கம், அரிமா சங்கம், ரோட்டரி சங்கத்தைச் சார்ந்தோர் ஆரணிக்கு ரயில் வசதி ஏற்படுத்த அரசிடம் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில், பாமகவைச் சேர்ந்த முன்னாள் ரயில்வே இணை அமைச்சர்

ஆர்.வேலுவின் முயற்சியால், திண்டிவனத்திலிருந்து ஆரணி வழியாக நகரி வரை ரயில் பாதை அமைக்க 2006-07ஆம் ஆண்டில், ரூ.750 கோடி மதிப்பில் திட்டம் அறிவிக்கப்பட்டது.

பின்னர் ஏப்ரல் 2008ஆம் ஆண்டு ஆரணியில் ஆர்.வேலு அடிக்கல் நாட்டினார்.

இந்த ரயில்பாதை திண்டிவனத்திலிருந்து வந்தவாசி, செய்யாறு, ஆரணி, ஆர்க்காடு, ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை வழியாக நகரியை சென்றடையும் வகையில் 179.20 கி.மீ. தொலைவுக்கு பணிகள் நடைபெற்று வந்தன. ரூ.2 கோடியில் ஆரணியில் ரயில் நிலையம் அமைக்கும் பணியும் நடைபெற்றது.

இந்நிலையில், ரயில்பாதைப் பணி இப்போது மந்தமாக நடைபெற்று வருவதால், இத்திட்டத்தை முடிக்க பல ஆண்டுகள் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது ஆரணி மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து, ஆரணி எம்.பி. எம்.கிருஷ்ணசாமி கூறியது: இத் திட்டத்துக்கு படிப்படியாக நிதி ஒதுக்கி வரும் மத்திய அரசு, இந்த ஆண்டும் நிதி ஒதுக்கியுள்ளது.

ரயில்பாதை அமைக்க நில ஆர்ஜிதம் செய்யப்பட்டு வருகிறது. சில இடங்களில் நிலத்தின் உரிமையாளர்களால் ஆர்ஜிதப் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனை விரைந்து முடித்து, ரயில்பாதைப் பணி தொடங்கப்படும் என்றார்.

எனவே, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பதே ஆரணி பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com