ரயில்வே பணிக்கு "எந்திரன்'
அரக்கோணம், பிப். 8: ரயில்வே துறையில் இருப்புப் பாதை பராமரிப்புப் பணிக்கு "பேலன்ஸ் கிளீனிங் மிஷன்' பயன்படுத்தப்படுகிறது. முன்பெல்லாம் 1 கி.மீ. தூரத்தை சீரமைக்க 50 பேர் ஒரு மாதம் பணிபுரிந்தனர். இப்போது


அரக்கோணம், பிப். 8: ரயில்வே துறையில் இருப்புப் பாதை பராமரிப்புப் பணிக்கு "பேலன்ஸ் கிளீனிங் மிஷன்' பயன்படுத்தப்படுகிறது.
முன்பெல்லாம் 1 கி.மீ. தூரத்தை சீரமைக்க 50 பேர் ஒரு மாதம் பணிபுரிந்தனர். இப்போது 25 கி.மீ. தூரத்தை இந்த இயந்திரம் ஒரே நாளில் செய்து முடிக்கிறது. இதனை இயக்கவும், கண்காணிக்கவும் 12 பேர் போதும்.
இருப்புப் பாதை பராமரிப்புப் பணிகள் கேங்மேன் என்று அழைக்கப்படும் ரயில்வே பணியாளர்களால் மெற்கொள்ளப்பட்டு வந்தன.
கடந்த சில ஆண்டுகளாக இந்தப் பணிகள் ஒப்பந்ததாரர்களால், அதிகாரிகளின் மேற்பார்வையில் நடைபெற்றன. இந்நிலையில், இப்போது இயந்திரங்களால் இப்பணி நடைபெறுகிறது.
அரக்கோணம்-சென்னை இடையே இருப்புப் பாதை அமைக்கப்பட்டு நூறாண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இப்போது ஆண்டு சிறப்பு பராமரிப்புப் பணிகள் இப்பாதையில் நடந்து வருகின்றன.
பேலன்ஸ் கிளீனிங் மிஷின்!
இப் பணியின்போது தண்டவாளத்தின் கீழுள்ள ஜல்லிகள் வெளியே எடுக்கப்பட்டு அவை சலிக்கப்பட்டு மண் அகற்றப்படும்.
இந்தப் பணிகள் இப்போது "பேலன்ஸ் கிளீனிங் மெஷின்' எனும் இயந்திரம் மூலம் நடைபெறுகிறது.
1 கி.மீ. தூர பணிகளைக் கடந்த காலங்களில் 50 பேர் ஒரு மாதம் செய்து வந்தனர். இப்போது இதே பணிகளை இந்த இயந்திரம் 2 மணி நேரத்தில் செய்து விடுகிறது.
இயந்திரம் பணிபுரியும் விதம்
இந்த இயந்திரம் இயங்கத் தொடங்கியவுடன், தண்டவாளத்தின் அடியில் இணைந்து தண்டவாளத்தை அப்புறப்படுத்தி அதனடியில் இருக்கும் ஜல்லிக் கற்களை அப்படியே கன்வேயரில் மேலே கொண்டு செல்கிறது.
அங்கு மண் மற்றும் தூசியைப் பிரித்து வெளியே தள்ளிவிட்டு மீண்டும் ஜல்லியை மற்றொரு கன்வேயர் மூலம் அள்ளிய இடத்திலேயே கொட்டி அதை சமப்படுத்துகிறது. இதை சில விநாடிகளில் செய்வதால் இந்த இயந்திரம் நகர்ந்து கொண்டே இருக்கிறது.
ஒரே நாளில் 25 கி.மீ.!
இந்த இயந்திரத்தைப் பராமரிப்பதற்கும், இயக்குவதற்கும் 8 பேரும், கண்காணிக்க 4 அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பணியாளர்கள் நாளொன்றுக்கு சுமார் 25 கி.மீ. தொலைவு ஜல்லியைப் போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாமல் சுத்தம் செய்கின்றனர்.
கடந்த சில நாள்களாக திருவள்ளூர்-அரக்கோணம் இடையே இப்பணியைச் செய்து வந்த பி.சி.எஸ். இயந்திரம் அரக்கோணம் வரை இப்பணியை முடித்து விட்டது.
இந்த இயந்திரத்தின் விலை ரூ.20 கோடிக்கு மேல் இருக்கும் என இந்த இயந்திரத்தைப் பராமரிக்கும் ஓர் அதிகாரி தெரிவித்தார்.
யாருக்கும் பாதிப்பில்லை!
ரயில்வே பாதை பராமரிப்புப் பணிகளை "கேங்மேன்' என்றழைக்கப்படும் தொழிலாளர்கள் மேற்கொண்டு வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக இப்பணியில் புதியதாக ஆள்கள் தேர்வு செய்யப்படவில்லை. பணியில் இருந்த பலரும், இதே துறையில் வேறு பணிகளுக்கு மாற்றப்பட்டுவிட்டனர். 50 பேர் இருந்த இடத்தில் இப்போது 5 பேர் மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது.
"கேங்மேன்கள் ரயில்வே பாதையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புதிய இயந்திரம் காரணமாக தொழிலாளர்களுக்கு பாதிப்பு இல்லை. மேலும் பணிகள் அதிவிரைவாக முடிகிறது. மாறிவரும் நவீன உலகுக்கு ஏற்ப ரயில்வேயும் மாறிவருகிறது' என்கின்றனர் ரயில்வே அதிகாரிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...