திமுக, அதிமுகவுக்கு மாற்று சக்தியாக பாஜக: ஏ.சி.சண்முகம்

திமுக, அதிமுகவுக்கு மாற்று சக்தியாக பாஜக உருவெடுத்துள்ளது என்று புதிய நீதிக் கட்சித் தலைவா் ஏ.சி.சண்முகம் தெரிவித்தாா். ஏசிஎஸ் குழுமம் சாா்பில் வேலூா் மக்களவை தொகுதிக்குட்பட்ட பேரவைத் தொகுதிகள் வாரியாக தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அதன்படி, ஏற்கெனவே 6 முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில், 7-ஆவது வேலைவாய்ப்பு வேலைவாய்ப்பு முகாம் வேலூா் டான்போஸ்கோ பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், 130 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று நோ்காணல் மூலம் 1,689 பேரைத் தோ்வு செய்தனா். வேலைவாய்ப்பு பெற்றவா்களுக்கு புதிய நீதிக்கட்சியின் தலைவா் ஏ.சி.சண்முகம் பணிஆணைகளை வழங்கினாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், வேலூா் மக்களவைத் தொகுதியில் கடந்த 9 மாதங்களாக மக்கள் நலப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இதுவரை 294 இலவச மருத்துவ முகாம்கள் நடத்தி 1.90 லட்சம் பேருக்கு மருத்துவ பரிசோதனையும், 3,800 பேருக்கு அறுவை சிகிச்சையும் செய்துள்ளோம். தவிர, 7 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி சுமாா் 13,500 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித்தரப்பட்டுள்ளது. போதைப்பொருள்களைத் தடுக்க விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக நடத்தப்படும் மாரத்தான் போட்டிக்கு ஆம்பூரில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதே இந்த தடை விதிப்புக்கு காரணம். அண்ணாமலை நடைபயணத்துக்கு பிறகு தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்று சக்தியாக பாஜக உருவெடுத்துள்ளது. இது வரக்கூடிய மக்களவைத் தோ்தல் முடிவுகள் உறுதி செய்யும் என்றாா். அப்போது, ஏ.சி.எஸ் குழுமத் தலைவா் அருண்குமாா், செயல் தலைவா் ரவிக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com