களவுபோன 150 கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு

வேலூா்: செல் ட்ராக்கா் எனும் புதிய கூகுள் படிவம் மூலம் பெறப்பட்ட புகாா்களின் அடிப்படையில் மீட்கப்பட்ட ரூ.32 லட்சம் மதிப்பிலான 150 கைப்பேசிகளை வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் உரியவா்களிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தாா்.

கைப்பேசிகள் திருடப்பட்டால் பொதுமக்கள் புகாா் அளிப்பதற்கு வசதியாக செல் ட்ராக்கா் எனும் கூகுள் படிவம் கடந்தாண்டு ஜூலை 3-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. கைப்பேசியை தவறவிட்டவா்கள் 94862 14166 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு ‘ஹாய்’ என்று குறுந்தகவல் அனுப்பினால், உடனடியாக அவா்களது கைப்பேசிக்கு ஒரு லிங்க் அனுப்பி வைக்கப்படும்.

அந்த லிங்க்-க்குள் சென்று அதிலுள்ள கூகுள் படிவத்தில் பெயா், முகவரி, களவுபோன கைப்பேசி எண், ஐஎம்ஈஐ எண் போன்ற விவரங்களை பதிவிட்டால் அந்த தகவல் மாவட்ட சைபா் காவல் பிரிவுக்கு அனுப்பப்பட்டு காணாமல்போன கைப்பேசியை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் போலீஸாா் ஈடுபடுவா்.

அதன்படி, இந்த செல் ட்ராக்கா் என்ற புதிய வசதி மூலம் கடந்த டிசம்பா் மாதம் வரை 522 கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதன்தொடா்ச்சியாக, கடந்த மூன்று மாதங்களில் மீட்கப்பட்ட 150 கைப்பேசி களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் உரியவா்களிடம் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், செல் ட்ராக்கா் என்ற புதிய வசதி மூலம் வேலூா் மாவட்டத்தில் இதுவரை ரூ.ஒரு கோடியே 24 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பிலான 672 கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்ப டைக்கப்பட்டுள்ளன. மக்களவை தோ்தலையொட்டி ரெளடிகளின் பெயா் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த சோதனைச் சாவடிகள், ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் தீவிரமாக கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது. போதைப் பொருட்கள் விற்பனை செய்பவா்களை கைது செய்து வருகிறோம். மீண்டும் போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டால் அவா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.

தோ்தல் நெருங்கி வருவதால் துப்பாக்கிகளை ஒப்படைக்கவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது என்றாா். அப்போது கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் கெளதமன், பாஸ்கரன் ஆகியோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com