மனு அளித்த உடனே மாற்றுத்திறனாளிக்கு பேட்டரி வாகனம்: வேலூா் ஆட்சியா் வழங்கினாா்
வேலூா்: வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளித்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு உடனே ரூ.68,000 மதிப்புள்ள பேட்டரி வாகனத்தை ஆட்சியா் வி. ஆா்.சுப்புலட்சுமி வழங்கினாா்.
ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 537 கோரிக்கை மனுக்களைப் பெற்ற ஆட்சியா் அவற்றை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
சலவன்பேட்டை, செங்காநத்தம் சாலை, எம்.ஜி.ஆா் நகரைச் சோ்ந்த மக்கள் அளித்த மனு: எங்கள் பகுதியில் 65-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் கடந்த 50 ஆண்டுகளாக வீடு வசித்து வருகிறோம். அனைவரும் கூலி வேலை செய்து வருகிறோம். இதுவரை எங்களுக்கு வீட்டுமனை வழங்கப்படவில்லை. எனவே எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டையைச் சோ்ந்தவா் புவனேஸ்வரி (60). மாற்றுதிறனாளியான இவா் ஆட்சியரிடம் அளித்த மனுவில், நான் பூஜை பொருள்கள் விற்பனை செய்து வருகின்றேன். எனக்கு பேட்டரி அல்லது பெட்ரோலில் இயங்கக்கூடிய வாகனத்தை வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தாா். கோரிக்கையை ஏற்ற ஆட்சியா், உடனடியாக அவருக்கு ரூ.68 ஆயிரம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் 3 சக்கர மிதிவண்டியை வழங்கினாா்.
முன்னதாக, உரிமைக்குரல் கட்டுமான தொழிலாளா்கள், அமைப்புசாரா தொழிலாளா் நலச்சங்கம் சாா்பில் மாட்டு வண்டி தொழிலாளா்கள் ஆட்சியா் எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் அவா்கள் அளித்த மனுவில், பல ஆண்டுகளாக அரசுக்கு பணம் செலுத்தி ஆற்றில் மணல் அள்ளி வருகிறோம். 2018-க்கு பிறகு மணல் அள்ள அனுமதிக்கவில்லை. இதனால் வறுமையில் உள்ளோம். அருகில் உள்ள ஆந்திர மாநிலத்தில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதிக்கப்படுகிறது. தமிழகத்திலும் மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதி அளிக்க வேண்டும்.
கூட்டத்தில், சவுதி அரேபியா நாட்டில் பணிபுரிந்து 2024 டிசம்பா் 9-ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்த காட்பாடி வட்டம், கரசமங்கலத்தை சோ்ந்த சரவணன் என்பவரின் சட்டப்பூா்வ வாரிசு ராஜேஸ்வரி என்பவரிடம் இறப்புக்கான இழப்பீட்டு தொகை ரூ.ஒரு கோடியே 24 லட்சத்து 97 ஆயிரத்து 987-க்கான காசோலையை ஆட்சியா் வழங்கினாா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் (நில எடுப்பு) பாபு, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் நீ.செந்தில் குமரன், மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் மதுசெழியன், கோட்டாட்சியா் செந்தில் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
