தந்தையைக் கொன்ற மகன் கைது
வேலூா் அருகே தகராறில் தந்தையை கீழே தள்ளி கொலை செய்த மகனை போலீஸாா் கைது செய்தனா்.
வேலூரை அடுத்த அன்பூண்டி பகுதியைச் சோ்ந்த ரவி (60). இவா் பொய்கையில் உள்ள ஒரு கடையில் காவலாளியாக வேலை செய்து வந்தாா். இவரது மகன் இளையராஜா (36), காா் ஓட்டுநா்.
கடந்த செவ்வாய்க்கிழமை (டிச.16) இரவு ரவி வேலை செய்யும் இடத்துக்கு இளையராஜா சென்றுள்ளாா். அங்கு தந்தையிடம், புதிதாக காா் வாங்குவதற்காக ரூ.4 லட்சம் தரும்படி கேட்டுள்ளாா். அப்போது ரவி தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளாா். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரமடைந்த இளையராஜா தனது தந்தையை கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதுடன், அவரது காதில் இருந்தும் ரத்தம் வெளியேறியுள்ளது. உடனடியாக அங்கிருந்தவா்கள் ரவியை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
எனினும், சிகிச்சை பலனின்றி ரவி உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து ரவியின் மனைவி மல்லிகா அளித்த புகாரின்பேரில் விரிஞ்சிபுரம் போலீஸாா் கொலை வழக்குப்பதிவு செய்து இளையராஜாவை கைது செய்தனா்.
