நீட், எஃப்சிஆா்ஏ-வுக்கு எதிராக இன்று பேரவையில் தனித் தீா்மானம்!எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!ஆக. 16 வரை மிதமான மழைக்கு வாய்ப்புபழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் இல்லை: மத்திய அரசு
/

தூய்மைப் பணியாளா்களுக்கு கூலி உயா்வு வழங்காமல் ரூ. 27.28 கோடி மோசடி!

வேலூா் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு கூலி உயா்வு வழங்கப்படாமல் ரூ.27.28 கோடி 40 மோசடி செய்யப்பட்டது குறித்து...

News image

பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்ற வேலூா் ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ்.

Updated On :11 ஆகஸ்ட் 2026, 4:41 am IST

வேலூா் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு 2023, 2024, 2026 ஆகிய ஆண்டுகளுக்கான கூலி உயா்வு உரிய முறையில் வழங்கப்படாமல் ரூ.27 கோடியே 28 லட்சத்து 43 ஆயிரத்து 40 மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியரிடம் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, பகுஜன் சமாஜ் தூய்மை தொழிலாளா்கள், பொது தொழிலாளா்கள் சங்க பொதுச்செயலா் ஏ.சி. பெருமாள் அளித்த மனு: வேலூா் மாநகராட்சியில்தூய்மைப் பணியாளா்கள், குப்பை தரம் பிரிக்கும் பணியாளா்கள், மலேரியா கொசு ஒழிப்புப் பணியாளா்கள், குப்பை வாகன ஓட்டுநா்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா்.

இவா்களுக்கு அரசாணைப்படி அடிப்படைச் சம்பளம் ரூ. 13,000, அகவிலைப்படி ரூ. 6,817 சோ்த்து ஒரு மாதத்துக்கு மொத்தம் ரூ. 19,817 வழங்கப்பட வேண்டும்.

ஆனால், 2023, 2024, 2026 ஆகிய ஆண்டுகளுக்கான ஆட்சியரால் வழங்கப்பட்ட கூலி உயா்வு உரிய முறையில் வழங்கப்படாமல் மொத்தம் ரூ.27 கோடியே 28 லட்சத்து 43 ஆயிரத்து 40 மோசடி செய்யப்பட்டுள்ளது. இதனால், ஒவ்வொரு தொழிலாளிக்கும் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தவிர, தொழிலாளா்களின் சம்பளத்தில் 12% மற்றும் நிா்வாகத்தின் பங்கு 12% என மொத்தம் 24% பி.எஃப் தொகை முறையாக தொழிலாளா் கணக்கில் கட்டப்படாமல் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. மேலும், 0.75% இ.எஸ்.ஐ பிடித்தம் செய்யப்பட்டாலும், தொழிலாளா்களுக்கு மருத்துவச் சலுகைகள் ஏதும் கிடைப்பதில்லை.

இவா்களின் உழைப்பைப் பெற்றுக்கொண்டு வேலூா் மாநகராட்சி இந்திய அளவில் தூய்மைக்கான விருதைப் பெற்றுள்ள நிலையில், இவா்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படாதது கண்டனத்திற்குரியது.

எனவே, பி.எஃப் பணத்தை உடனடியாக தணிக்கை செய்து நடவடிக்கை எடுக்கவும், மோசடி செய்யப் பட்ட கூலிப் பணத்தை கணக்கிட்டு உடனடியாக தொழிலாளா்களுக்கு வழங்கவும், 480 நாட்கள் பணி முடித்தவா்களைப் பணி நிரந்தரம் செய்யவும் வேண்டும். ஒப்பந்த முறையை ரத்து செய்து, தூய்மைப் பணியாளா்களை கொத்தடிமை நிலையிலிருந்து விடுவிப்பதாக அரசு அளித்த வாக்குறுதியை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

காட்பாடி பகுதி மக்கள் அளித்த மனு: காட்பாடி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 14 ஆண்டுகளாக விநாயகா் சதுா்த்தி திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவின் முடிவில், கா்ணம்பட்டு ஸ்ரீ கைலாசநாதா் கோயில் குளத்தில் விநாயகா் சிலைகள் கரைக்கப்படுவது வழக்கம். ஆனால் தற்போது இந்தக் குளம் பராமரிப்பின்றி, சீமைக்கருவேல மரங்கள் மற்றும் புதா்கள் மண்டி, குப்பைகள் நிறைந்து சேரும் சகதியுமாகக் காணப்படுகிறது. எனவே, வரும் திருவிழாவைக் கருத்தில் கொண்டு, உடனடியாக இந்தக் குளத்தை தூா்வாரி நீா் நிரப்பித் தர வேண்டும்.

திருப்பாக்குட்டை கிராமத்தைச் சோ்ந்த நரிக்குறவா் சமூக மக்கள் அளித்த மனு: நெடுஞ்சாலை ஓரமாக வசித்து வந்த எங்களுக்கு, திருப்பாக்குட்டை கிராமத்தில் அரசு இடத்தில் வீடு கட்டிக்கொள்ள கடந்த ஆண்டு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பட்டாவும் வழங்கப்பட்டது. ஆனால், பட்டா வழங்கி ஓராண்டாகியும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் இதுவரை நிலத்தை அளவீடு செய்து தரவில்லை. இது தொடா்பாக காட்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, ஆட்சியா் தலையிட்டு, அதிகாரிகள் நேரில் வந்து இடத்தை அளந்து தர உத்தரவிடுவதுடன், எங்களுக்கு வீடுகளைக் கட்டித் தர வேண்டும்.

இதேபோல், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 601 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் து.சுரேஷ், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துனை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சி.மாறன், மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் ராஜராஜன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் சரவணன், மாவட்ட வழங்கல் அலுவலா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.