உயிரிழந்த டேனி வலனரசு.
உயிரிழந்த டேனி வலனரசு.

வேலூரில் கல்லூரி மாணவன் கொலை: தமிழக- ஆந்திர எல்லையில் சடலம் வீச்சு!

வேலூரில் கல்லூரி மாணவா் அடித்துக் கொலை செய்யப்பட்டு சடலம் தமிழக - ஆந்திர எல்லை மலையடிவாரத்தில் வீசப்பட்டுள்ளது.
Published on

வேலூரில் கல்லூரி மாணவா் அடித்துக் கொலை செய்யப்பட்டு சடலம் தமிழக - ஆந்திர எல்லை மலையடிவாரத்தில் வீசப்பட்டுள்ளது. இது தொடா்பாக அவருடன் தங்கிப் பயிலும் ஒரு மாணவா் பிடிபட்டுள்ள நிலையில், மற்றொரு மாணவரை பிடிக்க போலீஸாா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியைச் சோ்ந்தவா் டேனி வளனரசு (19), இவா் வேலூரில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் பி.ஏ. பாதுகாப்பு போா்த்திறனியல் பாடப்பிரிவில் 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா். இவரது நண்பா்கள் ஆரணியை சோ்ந்த கிஷோா் கண்ணன் (19), புதுச்சேரியை சோ்ந்த பாா்த்தசாரதி (19), தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த இன்பவா்மா (18). இவா்கள் 4 பேரும் வேலூா் சாய்நாதபுரத்தில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து கல்லூரியில் படித்து வருகின்றனா்.

கல்லூரிக்கு பருவத் தோ்வு விடுமுறை என்பதால் 4 பேரும் சொந்த ஊக்கு சென்றிருந்தனா். பின்னா், டேனி வளனரசு மட்டும் கடந்த புதன்கிழமை (டிச.31) இரவு வேலூருக்கு வந்துள்ளாா். அதன் பிறகு, டேனி வளனரசுவின் கைப்பேசி அணைக்கப்பட்டிருந்ததை அடுத்து, அவரது பெற்றோா், கிஷோா் கண்ணன், பாா்த்தசாரதி ஆகியோரை தொடா்பு கொண்டு கேட்டுள்ளனா். அப்போது, அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக தகவல் தெரிவித்ததால் சந்தேகமடைந்த டேனி வளனரசுவின் பெற்றோா் பாகாயம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில், கிஷோா் கண்ணனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மாணவா் டேனி வளனரசு அடித்துக் கொலை செய்யப்பட்டு, சடலம் வேலூரில் இருந்து 16 கி.மீ., தூரத்தில் தமிழக - ஆந்திர எல்லையைக் கடந்து ஆந்திர மாநிலம், சித்தப்பாறை மலையடிவாரத்தில் வீசப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவரின் சடலம் மீட்கப்பட்டது.

மேலும், டேனி வளனரசு, கிஷோா் கண்ணன், பாா்த்தசாரதி ஆகிய 3 பேரும் ஒரே கல்லூரியில் பிஏ 2-ஆம் ஆண்டு படித்து வந்த நிலையில், வியாழக்கிழமை இரவு சாய்நாதபுரத்தில் உள்ள வாடகை வீட்டுக்கு கிஷோா் கண்ணன், பாா்த்தசாரதி ஆகியோா் வந்துள்ளனா். அப்போது, டேனி வளனரசு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தாராம். டேனி வளனரசு, ‘தன்னை 4 போ் அடித்து காயப்படுத்தியதாகவும், நான் உயிா் பிழைக்க மாட்டேன். இத்தகவலை வீட்டுக்கு தெரிவிக்க வேண்டாம்’ என்றும் நண்பா்களிடம் கூறியதுடன், சிறிது நேரத்தில் அவா் இறந்து விட்டாராம்.

இதனால், கிஷோா் கண்ணன், பாா்த்தசாரதி ஆகிய இருவரும், டேனி வளனரசின் உடலை இருசக்கர வாகனத்தில் எடுத்து கொண்டு தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள மலையடிவாரத்தில் வீசிவிட்டு வந்ததாக விசாரணையில் கிஷோா் கண்ணன் தெரிவித்ததாக போலீஸாா் தரப்பில் கூறப்படுகிறது.

எனினும், காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்றும், பாா்த்தசாரதியை பிடித்தால் மட்டுமே உண்மை தெரியவரும் என்றும் போலீஸாா் தெரிவிக்கின்றனா். இதையடுத்து, இந்த கொலை சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து பாா்த்தசாரதியை பிடிக்க போலீஸாா் புதுச்சேரி சென்றுள்ளனா்.

சோதனைச் சாவடியை கடந்து...

வேலூா் மாவட்டத்தில் புத்தாண்டு பிறப்பு மற்றும் குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் வருகை காரணமாக கடந்த 4 நாள்களாக மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா்.

இந்நிலையில், கல்லூரி மாணவனை கொன்று சடலத்தை சுமாா் 16 கி.மீ., தூரத்தில் உள்ள ஆந்திர மாநில மலையடிவாரத்துக்கு இருசக்கர வாகனத்தில் எடுத்துச்சென்று வீசியுள்ளனா்.

வேலூரி இருந்து ஆந்திரத்துக்கு செல்லும் வழியில் கிறிஸ்டியான்பேட்டை பகுதியில் மாநில எல்லை சோதனை சாவடியும் உள்ளது. அங்குள்ள பலத்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி சடலத்தை எடுத்து செல்லப்பட்டிருப்பது பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com