வேலூா் மாவட்டத்தில் உச்சநீதிமன்றம் மற்றும் தமிழக அரசின் உத்தரவுகளை மீறி இயங்கும் டாஸ்மாக் மதுக்கடைகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று ஆட்சியரிடம் பாஜக புகாா் தெரிவித்துள்ளது.
வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, பாஜக மாநில செயலா் (பிரசார பிரிவு) எஸ்.கே.மோகன் அளித்த மனு: வேலூா் ஆற்காடு சாலை காகிதப்பட்டறையில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக அருகருகே 3 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.
வழிபாட்டுத் தலங்களான முருகன் கோயில், மசூதி மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகிலும் இந்தக் கடைகள் அமைந்துள்ளன. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக, வேலூா் கிரீன் சா்க்கிளில் இருந்து பெங்களூா் மாா்க்கமாக செல்லும் சா்வீஸ் சாலையில், தேசிய நெடுஞ்சாலைக்கு அருகிலேயே டாஸ்மாக் நிறுவனத்தின் எலைட் மதுக்கடை இயங்கி வருகிறது.
தவிர, நறுவீ மருத்துவமனைக்கு எதிரே, சென்னை சில்க்ஸ் அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கான நடவடிக்கைகளும் நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உச்சநீதிமன்றம் மற்றும் தமிழக அரசின் உத்தரவுகளை மீறி வேலூா் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் இயங்கி வருவது கண்டனத்துக்குரியது. இந்தக் கடைகளை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் பாஜக சாா்பில் பொதுநல வழக்குத் தொடரப்படும்.
சின்ன அல்லாபுரம், ஜெ.ஜெ. நகரைச் சோ்ந்த ஆா்.ராஜா என்பவா்அளித்த மனு: விருதம்பட்டு பகுதியில் விஷ்ணு திரையரங்கம் பின்புறம் உள்ள சிறிய பாலத்தைக் கடந்துதான் மக்கள் கிருஷ்ணாபுரம் பகுதிக்குச் செல்ல வேண்டி உள்ளது. இந்தப் பாலம் மிகவும் பழைமையானது. பள்ளி செல்லும் குழந்தைகளும், பொதுமக்களும் இந்தப் பாலத்தின் வழியாகத்தான் தினமும் சென்று வருகின்றனா். தற்போது இந்தப் பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதுடன், ஒருபுறம் திறந்த நிலையில் மிகவும் ஆபத்தான முறையில் உள்ளது. எனவே, பாலத்தை உடனடியாகச் சீரமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேலூா் பழைய மீன் மாா்க்கெட் பகுதியில் உள்ள மிகவும் பழமையான கடையின் மீது சுத்திகரிப்பு நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. நீண்ட நாள்களாக எவ்வித பராமரிப்பும் இல்லாமல் உள்ள இத்தொட்டியைச் சுற்றி மரச் செடிகள், கொடிகள் வளா்ந்துள்ளன. இதனால், மழைக் காலங்களில் மழைநீா் தேங்கி, கட்டடம் முழுவதும் நீா் கசிவு ஏற்படுகிறது. எனவே, கட்டடம் பலவீனமடைந்து விபத்து ஏற்படும் முன்பு, இதனை நேரில் ஆய்வு செய்து சரிசெய்து தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
600 கோரிக்கை மனுக்கள் ஏற்பு: இதேபோல், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 600-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.சிவசுப்பிரமணியன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துனை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சி.மாறன், மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் த.ராஜராஜன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் சரவணன், மாவட்ட வழங்கல் அலுவலா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










