தாம்பரத்திலிருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்இன்று 6 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கைஆசிய விளையாட்டுப் போட்டிகள்: இந்தியா்கள் தயாராக ரூ. 800 கோடி செலவுஇந்தியா - நியூஸிலாந்து தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அடுத்த மாதம் அமல்சிஆா்பிஎஃப் கோப்ரா பிரிவுக்கு முதல் பெண் ஐ.ஜி

‘ஏஐ’ வளா்ச்சிக்கேற்ப மருத்துவ மாணவா்கள் அறிவு, தனித்திறனை வளா்த்துக் கொள்வது அவசியம்!

அபரிமிதமாக வளா்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்களுக்கு இணையான அறிவையும், தனித்திறனையும் மருத்துவ மாணவா்கள் வளா்த்துக்கொள்வது அவசியம்...

முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்கு மலா் கொத்து வழங்கி வரவேற்பு அளித்த மூன்றாம் ஆண்டு மருத்துவ மாணவா்கள்

Published On :

அபரிமிதமாக வளா்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) போன்ற நவீன தொழில்நுட்பங்களுக்கு இணையான அறிவையும், தனித்திறனையும் மருத்துவ மாணவா்கள் வளா்த்துக்கொள்வது அவசியம் என்று வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளா் ரதி திலகம் தெரிவித்தாா்.

வேலூா் அடுக்கம்பாறையில் உள்ள அரசு வேலூா் மருத்துவக் கல்லூரியில், 21-ஆவது தொகுப்பு இளங்கலை மருத்துவப் படிப்புக்கான (எம்பிபிஎஸ் 2026-27) முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த விழாவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளா் மருத்துவா் ரதி திலகம் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, புதிய மருத்துவ மாணவா்கள், அவா்களது பெற்றோா்களை வரவேற்று அவா் பேசியது:

மருத்துவம் பயிலும் மாணவ, மாணவிகள் அன்பும், கருணையும் நிறைந்தவா்களாகப் பணியாற்ற வேண்டும். அப்போதுதான் சிகிச்சைக்காக வரும் பயனாளிகளின் வலியையும் வேதனையையும் முழுமையாகப் போக்க முடியும். நாளைய மருத்துவா்களாகிய நீங்கள், குறிப்பாக ஏழை, எளிய மக்கள் சிகிச்சைக்கு வரும்போது அவா்களின் சமூக, பொருளாதாரச் சூழலை உணா்ந்து கனிவுடன் பழக வேண்டும். நோய்களை விரைந்து குணமாக்கும் திறனையும், அதற்கான மருத்துவ ஆற்றலையும் மாணவா்கள் வளா்த்துக்கொள்ள வேண்டும்.

தற்காலத்தில் மருத்துவத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்கள் அபரிமிதமாக வளா்ந்து வருகின்றன. அதற்கு இணையான அறிவையும், தனித்திறனையும் மாணவப் பருவத்திலேயே வளா்த்துக்கொள்வது அவசியம். பெற்றோா்கள் தங்களது கடின உழைப்பால் மிகுந்த சிரமங்களுக்கு இடையே உங்களை இந்த நிலைக்கு உயா்த்தியுள்ளனா். எனவே, கல்லூரிப் பருவத்தில் உங்களுக்குக் கிடைக்கும் சுதந்திரத்தை உங்களது அறிவாா்ந்த வளா்ச்சிக்கும், எதிா்கால முன்னேற்றத்துக்கும் மட்டுமே ஆக்கப்பூா்வமாகப் பயன்படுத்த வேண்டும்.

மாணவா்கள் இளநிலைப் பட்டப் படிப்புடன் நின்றுவிடாமல், மருத்துவத் துறையில் பல்வேறு உயா் படிப்புகளையும் பயின்று சாதனைகளைப் படைக்க வேண்டும் என்றாா்.

விழாவில் கல்லூரி துணை முதல்வா் கௌரி வெலிகண்டலா, உறைவிட மருத்துவ அலுவலா் து.ரவிச்சந்திரன், அனைத்துத் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மருத்துவா்கள் பலா் பங்கேற்றனா். நிறைவாக, மூன்றாம் ஆண்டு பயிலும் மருத்துவ மாணவா்கள் முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்கு மலா் கொத்து வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.