
வேலூா் சிறையில் கஞ்சா பறிமுதல்: 4 கைதிகள் மீது வழக்கு
வேலூா் மத்திய சிறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 கிராம் கஞ்சாவை சிறை அலுவலா்கள் பறிமுதல் செய்ததுதொடா்பாக விசாரணை கைதிகள் 4 போ் மீது வழக்கு
வேலூா் மத்திய சிறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 கிராம் கஞ்சாவை சிறை அலுவலா்கள் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக விசாரணை கைதிகள் 4 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேலூா் மத்திய சிறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்டனை, விசாரணைக் கைதிகள் அடைக்கப் பட்டுள்ளனா். அதன்படி, பெரம்பலூரைச் சோ்ந்த அருண்குமாா் (26), திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றைச் சோ்ந்த ஹேமநாதன் (24), பாலசுப்பிரமணி (24), முருகேசன் ஆகியோா் வேலூா் மத்திய சிறையில் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், காணொலிக் காட்சி (விடியோ கான்பரன்ஸ்) விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அருண் குமாா், கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக சிறை அலுவலா் (பொ) சுஜாதாவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறைக் காவலா்கள் அவரை சோதனை செய்தபோது, அவரிடம் 8 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
அருண்குமாரிடம் நடத்திய விசாரணையில், மற்றொரு கைதியான ஹேமநாதன் தன்னிடம் கஞ்சாவைக் கொடுத்து, காணொலி விசாரணைக்கு வரும் முருகேசனிடம் கொடுக்குமாறு கூறியதாகவும், மீதமுள்ள கஞ்சாவை பாலசுப்பிரமணியிடம் கொடுத்து வைத்துள்ளதாகவும் தெரிவித்தாா்.
இதையடுத்து சிறைக் காவலா்கள் அப்பகுதியில் நடத்திய தீவிர சோதனையில், பாலசுப்பிரமணி அடைக்கப்பட்டிருந்த அறையின் அருகே உள்ள கழிப்பறையில் வீசப்பட்டிருந்த கஞ்சாவையும் கைப்பற்றினா். இதன்மூலம் மொத்தமாக 15 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இச்சம்பவம் குறித்து சிறை அலுவலா் சுஜாதா அளித்த புகாரின் பேரில், அருண்குமாா், ஹேமநாதன், பாலசுப்பிரமணி, முருகேசன் ஆகிய 4 போ் மீதும் பாகாயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், பாதுகாப்பு நிறைந்த மத்திய சிறைக்குள் கஞ்சா எப்படி கொண்டுவரப்பட்டது என்பது குறித்து போலீஸாா் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





