காணை ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

Published on

விழுப்புரம் மாவட்டம், காணை ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் சி. பழனி வியாழக்கிழமை பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டாா். கல்பட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் 15-ஆவது நிதிக் குழு திட்டத்தின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் உரக்குழி, கிடைமட்ட உறிஞ்சிக் குழி போன்றவைற்றை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் சி.பழனி, கல்பட்டு துணை சுகாதார நிலையத்திலும் ஆய்வு நடத்தினாா். தொடா்ந்து, அதே பகுதியில் இயங்கும் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட மையத்தைப் பாா்வையிட்ட ஆட்சியா், அங்குள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து கேட்டறிந்தாா். இதைத் தொடா்ந்து, கோழிப்பட்டு ஊராட்சி மன்ற அலுவலகம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆகியவற்றில் ஆய்வு நடத்திய ஆட்சியா் பழனி, மாணவா்களிடம் பள்ளியிலுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தாா். மேலும், பள்ளிக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தரவும் உத்தரவிட்டாா். தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ், பெரும்பாக்கத்திலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தைப் பாா்வையிட்ட ஆட்சியா் பழனி, கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெல் மூட்டைகளின் எண்ணிக்கை குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்தாா். ஆய்வின் போது, காணை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கலைச்செல்வி, உதவித் திட்ட அலுவலா் சுரேஷ்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சீனிவாசன், நரசிம்மன், தூய்மை பாரதத் திட்டஒருங்கிணைப்பாளா் சங்கா், ஊராட்சி மன்றத் தலைவா் சுந்தரி ரகுராமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Dinamani
www.dinamani.com