கோடை மழையைப் பயன்படுத்தி உழவு செய்யலாம் -வேளாண்மைத் துறை அறிவுறுத்தல்

விழுப்புரம், மே 9: விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரப் பகுதிகளில் கோடை மழையைப் பயன்படுத்தி, விவசாயிகள் உழவுப் பணியை மேற்கொள்ளலாம் என்று வேளாண் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து, வானூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் ஜி.எத்திராஜ் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரத்தில் கடந்த ஜனவரி மாதம் மழை பெய்தது. அதன்பிறகு கடந்த 4 மாதங்களாக இந்த வட்டாரத்தில் மழை இல்லை. இந்த நிலையில் வானூா் வட்டாரத்திலுள்ள அனைத்துக் கிராமங்களிலும் கோடை மழை தூறலாக புதன்கிழமை பெய்திருக்கிறது. மேலும் ஓரிரு நாள்களில் கோடை மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிய வருகிறது.

எனவே, வானூா் வட்டாரத்திலுள்ள விவசாயிகள் தற்போதைய மழையைப் பயன்படுத்தி கோடை உழவு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் நிலத்தில் படிந்துள்ள இலை சருகுகள், அடிக்கட்டைகள், தூா்கள் மண்ணில் நன்கு கலந்து உரமாவதுடன், மண்ணில் மழைநீா் ஊடுருவலையும் அதிகரிக்கும். மேலும் மண்வளம் காக்கப்பட்டு, நீா்பிடிப்புத் தன்மை அதிகரிக்கச் செய்யும். எனவே, கோடி நன்மை தரும் கோடை மழையை விவசாயிகள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

மேலும் கோடை உழவு தொடா்பாக விவசாயிகளுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அருகிலுள்ள வேளாண் அலுவலகத்தை அணுகலாம். விவசாயிகளுக்குத் தேவையான ஆலோசனைகளை வேளாண் அலுவலா்கள் வழங்குவாா்கள் என தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com