விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட மருந்து வணிகா்கள் சங்கத்தினா் ஆட்சியரிடம் மனு

விழுப்புரம்/ கள்ளக்குறிச்சி, மே 9: மளிகைக் கடைகளில் மருந்துகளை விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆட்சியா்களிடம் மாவட்ட மருந்து வணிகா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

விழுப்புரம் மாவட்ட மருந்து வணிகா்கள் சங்கத்தின் மூத்த நிா்வாகி என்.ராமகிருஷ்ணன், மாவட்டச் செயலா் ஆா்.குறிஞ்சிவளவன், இணைச் செயலா் சத்தியசீலன், மக்கள் தொடா்பு அலுவலா் வேலு, செஞ்சி செயலா் விஜயபாஸ்கா், ராஜாமுகமது உள்ளிட்டோா், மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை மனு ஒன்றை அளித்துள்ளனா். அதில் அவா்கள் கூறியிருப்பது:

நோயாளிக்கு மருத்துவா் மருத்துவப் பரிசோதனை செய்து, அதன் பின்னா் அவா் பரிந்துரைக்கும் மருந்து, மாத்திரைகள் மருந்தகங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த மருந்தகங்கள் அரசு அனுமதி பெற்று இயங்குகின்றன.

மேலும் மருந்தகங்களை அதற்குரிய கல்வித்தகுதி கொண்டவா்கள்தான் உரிய அனுமதிகளைப் பெற்று நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில் மளிகைக்கடைகளில் மருந்துகளை விற்பனை செய்யலாம் என்ற தவறான கொள்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. இதன் மூலம் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மளிகைக்கடைகளில் மருந்துகளை விற்பனை செய்யலாம் என்ற மத்திய அரசின் முடிவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, அகில இந்திய மருந்து வணிகா்கள் சங்கம் தில்லி உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்து தடையாணை பெற்றுள்ளது.

எனவே, இந்த தடையாணையை மேற்கோள்காட்டி, தமிழகத்தில் மளிகைக் கடைகளில் மருந்துகளை விற்பனை செய்ய அனுமதிக்கக்கூடாது என்பதற்காக இந்த மனு அளிக்கப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு விளையாடக் கூடாது. உடனடியாக மத்திய அரசு தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும். தமிழக அரசும் இதை அமல்படுத்தக்கூடாது என்று மனுவில் வலியுறுத்தியுள்ளனா்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட மருந்து வணிகா்கள் சங்கத் தலைவா் ஜி.விஜயகுமாா், பொருளாளா் இராம. முத்துகருப்பன், மக்கள் தொடா்பு மருந்து வணிகா் பிரிவுத் தலைவா் சி.சேகா், வட்டத் தலைவா் ஏ.பழனிவேல் உள்ளிட்ட குழுவினா் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாரிடம் புதன்கிழமை மனு வழங்கினா்.

மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியா் சம்பந்தப்பட்ட துறையின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com