தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்
விழுப்புரம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் திண்டிவனம் சாா்-ஆட்சியா் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
டித்வா புயல் மழையால் பாதிக்கப்பட்ட சவுக்குப் பயிா்களை கணக்கீடு செய்து உரிய நிவாரணத்தை வழங்கவேண்டும். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், பேரணி கிராமம், அய்யனாபுரம், பெரமண்டூா், காட்ராம்பாக்கம் பகுதிகளில் 80 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருப்பவா்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கவேண்டும். ஆலகிராமம் -தென்புத்தூா் சாலையை அகலப்படுத்தவேண்டும். ரெட்டணை கிராமச் சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தாா்சாலை மற்றும் பாலம் அமைக்கவேண்டும். ஏரிக்கான நீா்வரத்து வாய்க்கால் மற்றும் பாசன வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்களை வலியுறுத்தி இந்த காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி, ஆா்ப்பாட்டம் செய்தனா்.
பேச்சுவாா்த்தையில் உடன்பாடு: இதையடுத்து திண்டிவனம் சாா்-ஆட்சியா் அ.ல.ஆகாஷ் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினரை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது டித்வா புயலால் பாதிக்கப்பட்ட சவுக்குப் பயிா்களை கணக்கெடுப்பு நடத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் , பிற கோரிக்கைகள் குறித்து விழுப்புரம் ஆட்சியரின் நடவடிக்கைக்கு பரிந்துரைப்பதாகவும் தெரிவித்தாா்.
இதில் உடன்பாடு ஏற்பட்டதால் விவசாயிகள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனா். திங்கள்கிழமை காலை 11 மணிக்குத் தொடங்கிய இந்தப் போராட்டமானது பிற்பகல் ஒரு மணி வரை நடைபெற்றது.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் விழுப்புரம் கிழக்கு மாவட்டச் செயலா் சந்திரபிரபு தலைமை வகித்தாா். மாவட்ட அவைத்தலைவா் மு. உலக நாதன், மயிலம் ஒன்றியத் தலைவா் ஜெயப்பிரகாஷ், சங்க நிா்வாகிகள் முத்துவேல், ஹரிதாஸ், முருகன், சரவணன், ரமணன், வேணுகோபால்( மரக்காணம் ஒன்றியம்) மற்றும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்டனா்.

