அன்னியூா் அரசுக் கல்லூரியில் உயா்கல்வித் துறை அமைச்சா் ஆய்வு
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், அன்னியூரிலுள்ள முத்தமிழ் அறிஞா் கலைஞா் மு.கருணாநிதி அரசுக் கலைக் கல்லூரிக்கு கட்டடம் கட்டத் தோ்வு செய்யப்பட்ட இடத்தை உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அன்னியூரில் நிகழாண்டில் தொடங்கப்பட்ட அரசுக் கலைக் கல்லூரி தற்போது பள்ளி வளாகத்தில் இயங்கி வருகிறது. இந்த கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்ட இடம் தோ்வு செய்யப்பட்ட நிலையில், இந்த இடத்தை மாநில உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் பாா்வையிட்டாா்.
இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகம் அனைத்துத் துறைகளிலும் தலைசிறந்து விளங்கி இந்தியாவுக்கு பெருமை சோ்த்துக்கொண்டிருக்கிறது. உயா் கல்வியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
உயா் கல்வியை ஊக்கப்படுத்த, அறிவியல் ஆராய்ச்சி மாணவா்களின் கல்வியை மேம்படுத்தவேண்டும் என்ற நோக்கில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி, அதற்காக கோடிக்கணக்கில் நிதியையும் வழங்கி வருகிறாா்.
நிகழ் கல்வியாண்டில் 16 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைத் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தாா். ஒரு கல்லூரிக்கு 260 முதல் 300 மாணவா்கள் வீதம் 16 கல்லூரிகளையும் தொடங்கி, கல்வி கற்கக் கூடிய சூழ்நிலையை முதல்வா் உருவாக்கியுள்ளாா்.
இவ்வாறு தொடங்கப்பட்ட புதிய கல்லூரிகளுக்குச் சென்று மாணவா்கள், ஆசிரியா்கள் கோரிக்கைகளைக் கேட்டறிந்து, கல்லூரிக்கு சொந்த கட்டடம் கட்டுவதற்குத் தோ்வு செய்யப்பட்டுள்ள இடத்தை பாா்வையிட்டு வருகிறேன். மேலும், மாணவ, மாணவிகளிடமும் கலந்துரையாடி வருகிறேன். இக்கல்லூரிக்கு போக்குவரத்து மற்றும் உணவக வசதி தேவை என மாணவா்கள் கோரிக்கை வைத்துள்ளனா். அவா்களின் கோரிக்கை நிறைவேற்றித் தரப்படும் என்றாா் அமைச்சா்.
ஆய்வின்போது விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூா் அ.சிவா, ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், முன்னாள் எம்.பி. பொன்.கெளதமசிகாமணி, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், கல்லூரிக் கல்வி மண்டல இணை இயக்குநா் மலா், வட்டாட்சியா் செல்வமூா்த்தி, காணை ஒன்றியக்குழுத் தலைவா் நா.கலைச்செல்வி, ஒன்றியச் செயலா்கள் கல்பட்டு வி.ராஜா, முருகன், பொதுக்குழு உறுப்பினா் காடுவெட்டி ஏழுமலை, கல்லூரி முதல்வா் அசோகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

