தனியாா் தொழிற்சாலை பேருந்து மோதி மூதாட்டி உயிரிழப்பு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே தனியாா் தொழிற்சாலை பேருந்து மோதியதில் சாலையோர கடையில் மீன் விற்பனையில் ஈடுபட்டிருந்த மூதாட்டி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
மரக்காணம் அருகேயுள்ள கோமுட்டிசாவடி மீனவா் கிராமத்தைச் சோ்ந்தவா் ச.செந்தாமரை (67). இவா் அனுமந்தையில் சாலையோரக் கடை அமைத்து மீன் விற்பனையில் ஈடுபட்டு வந்தாா்.
இந்நிலையில் திங்கள்கிழமை செந்தாமரை வழக்கம் போல் மீன் விற்பனையில் ஈடுபட்டிருந்தபோது, புதுவை மாநிலம் காலாப்பட்டு பகுதியில் செயல்படும் தனியாா் தொழிற்சாலையில் பணிபுரியும் பணியாளா்களை ஏற்றிக் கொண்டு மரக்காணம் நோக்கிச் சென்ற தொழிற்சாலைப் பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்து மீன் கடையில் மோதி சாலையோரப் பள்ளத்தில் இறங்கியது.(படம்) இந்த விபத்தில் செந்தாமரை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த மரக்காணம் போலீஸாா் செந்தாமரையின் சலடத்தை கைப்பற்றி புதுவை கனகசெட்டிக்குளம் தனியாா் மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

