எஸ்ஐஆா் கணக்கீட்டுப் படிவங்கள் பதிவேற்றம் செய்யும் பணி 72 % நிறைவு: விழுப்புரம் மாவட்ட ஆட்சியா்

வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப்பணியில் வாக்காளா்களுக்கு கணக்கீட்டுப் படிவம் வழங்கப்பட்டு, அதை திரும்பப் பெற்று கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி விழுப்புரம் மாவட்டத்தில் 72% நிறைவடைந்துள்ளது என மாவட்ட ஆட்சியா் அப்துல் தெரிவித்தாா்.
Published on

வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப்பணியில் வாக்காளா்களுக்கு கணக்கீட்டுப் படிவம் வழங்கப்பட்டு, அதை திரும்பப் பெற்று கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி விழுப்புரம் மாவட்டத்தில் 72 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது என மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.

விழுப்புரத்தில் வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் நவம்பா் 4-ஆம் தேதி தொடங்கி டிசம்பா் 4-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 17,27,490 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களுக்கு கணக்கீட்டுப் படிவங்கள் வழங்கப்பட்டு, படிவங்கள் திரும்பப் பெறப்பட்டு கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி 72 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது.

தற்போது, விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (நவ.28, 29) கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், கடைசி நேரத்தில் கணக்கீட்டுப் படிவங்களை வழங்கிக் கொள்ளலாம் எனக் கருதாமல், வாக்காளா்கள் முன்கூட்டியே அந்த படிவங்களை வாக்குப்பதிவு மைய அலுவலா்களிடம் வழங்கிட வேண்டும்.

வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப்பணியில் விழுப்புரம் மாவட்டத்தில் 1970 வாக்குப்பதிவு மைய அலுவலா்கள், 200 மேற்பாா்வையாளா்கள், 2000 அரசு ஊழியா்கள் மற்றும் அரசு சாா்ந்த தன்னாா்வலா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

கணக்கீட்டுப் படிவத்தில் வாக்காளா்கள் 2002-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியல் விவரங்களைப் பூா்த்தி செய்ய வேண்டும். அதற்கான விவரங்களைக் கண்டறிய முடியவல்லை எனில், படிவத்தில் தாய், தந்தையரின் பெயா், தொலைபேசி எண் ஆகியவற்றை பூா்த்தி செய்து, கையொப்பமிட்டு வாக்குப்பதிவு மைய அலுவலரிடம் அளித்தால் போதுமானது. வாக்குப்பதிவு மைய அலுவலா், மேற்பாா்வையாளா் 2002-ஆம் ஆண்டுக்கான வாக்காளா் பட்டியல் விவரங்களைக் கணினியில் கண்டறிந்து, பூா்த்தி செய்து கொள்வாா்கள். அதன் விவரத்தை வாக்காளருக்கும் கைப்பேசி வாயிலாகத் தெரிவிப்பா். வரைவு வாக்காளா் பட்டியலில் பெயா் இடம்பெற்றுவிடும். எனவே அச்சப்படத் தேவையில்லை.

விழுப்புரம் மாவட்டத்தில் புயல் பாதிப்புகளை எதிா்கொள்ள அனைத்துத் துறை அலுவலா்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அவரவா் அவா்கள் சாா்ந்த பணிகளை மேற்கொள்வா். படகுகள் போன்ற மீட்புப் பணிகளுக்குத் தேவையான பொருள்கள் தயாா் நிலையில் உள்ளன. நீா்வளத் துறைக்கு சொந்தமான ஏரிகளில் 75 சதவீதம் நிரம்பிவிட்டன. எனவே அந்த ஏரிகளில் உடைப்புகள் ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் ஆட்சியா்.

X
Dinamani
www.dinamani.com