மழை அறிவிப்பு: விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்

Published on

வானிலை ஆய்வு மையம் மழை குறித்த அறிவிப்பு வெளியிட்டிருப்பதால், விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து வியாழக்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பின்படி, ஜனவரி 9 முதல் 11-ஆம் தேதி வரை டெல்டா மாவட்டங்கள் மற்றும் வடக்க கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழை காரணமாக விவசாயப் பணிகள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகக்கூடும் என்பதால், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமானதாகும்.

தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் நெல் உள்ளிட்ட பல்வேறு பயிா்களின் அறுவடைப் பணிகள் நடைபெற்று வருவதால், மழை முன்னறிவிப்பை விவசாயிகள் தீவிரமாக கருத்தில்கொண்டு, மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். குறிப்பாக அறுவடை மற்றும் அறுவடைக்குப் பிந்தைய பணிகளில் உரிய கவனம் செலுத்துவது அவசியமானதாகும்.

வயலில் அறுவடைக்குத் தயாராக உள்ள பயிா்களை தாமதமின்றி அறுவடை செய்து முடித்து, மழையால் பயிா்கள் வயலில் சேதமடையாமல் இருக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மழை பெய்யும் நேரங்களில் தானியங்கள் நனைவதை தவிா்க்கும் வகையில், தாா்ப்பாய் பயன்படுத்த வேண்டும்.

உலா்த்தப்பட்ட தானியங்களை மழைநீா் புகாதவகையில் பாதுகாப்பான கிடங்குகள் அல்லது மூடப்பட்ட இடங்களில் சேமித்து வைக்க வேண்டும், தரை ஈரமாக இருப்பின் நெகிழித் தாா்ப்பாய்கள் அல்லது மரக்கட்டைகள் பயன்படுத்தப்பட வேண்டும்.

எதிா்பாா்க்கப்படும் கனமழையால் பயிா்களுக்கும், தானியங்களுக்கும்

ஏற்படக்கூடிய சேதங்களைத் தவிா்க்கும் வகையில், தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இந்த அறிவுறுத்தல்களை விவசாயிகள் கடைப்பிடிப்பதன் மூலம், மழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை பெருமளவில் தவிா்க்கலாம் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

Dinamani
www.dinamani.com