பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதன் ஓராண்டு தினத்தை முன்னிட்டு, விருத்தாசலத்தில் எதிர்ப்பு மற்றும் ஆதரவு நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றன. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த 2016, நவம்பர் 8 -ஆம் தேதி இரவு திடீரென உயர்மதிப்புக் கொண்ட ரூ. 500, 1,000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. அரசின் இந்த நடவடிக்கையால் கருப்புப் பணம் ஒழியவில்லை எனக் கூறி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும், மத்திய அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தமிழகத்தில் திமுக தலைமையில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால், கடலூர் மாவட்டம், மழையால் பாதிக்கப்பட்டிருப்பதால் இங்கு போராட்டம் நடைபெறாது என்று திமுக அறிவித்திருந்தது.
எனினும், கடலூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில், தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில், அந்தக் கட்சியின் மாவட்டச் செயலர் சி.வெ.கணேசன்
எம்.எல்.ஏ. தலைமையில் அந்தக் கட்சியினர் விருத்தாசலத்தில் புதன்கிழமை கூடினர். அவர்களில் பெரும்பாலானோர் கருப்புச் சட்டை அணிந்து தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். மேலும், முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றனர்.
கட்சியின் மாவட்டப் பொருளாளர் பாவாடை கோவிந்தசாமி, துணைச் செயலர் அரங்க.பாலகிருஷ்ணன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் குழந்தை தமிழரசன், பிவிபி.முத்துக்குமார், நகரச் செயலர் எம்.கே.அருள்குமார், நிர்வாகிகள் ஜெ.அப்துல்லா, ச.சிங்காரவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கடலூரில் மாநில திமுக தேர்தல் பணிக் குழுச் செயலர் இள.புகழேந்தி தலைமையில் நகரச் செயலர் கே.எஸ்.ராஜா உள்ளிட்டோர் கருப்புச் சட்டை அணிந்து கட்சி நகர அலுவலகம் எதிரே கூடி தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
அதேநேரம், மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டில் பல்வேறு தரப்பினரும் முன்னேற்றம் அடைந்திருப்பதோடு, போலி நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், நாட்டில் தீவிரவாதம் குறைந்திருப்பதோடு, வங்கிகளில் வட்டி விகிதம் குறைந்திருப்பதாகக் கூறி பாஜகவினர் இந்த நாளை வெற்றித் தினமாகக் கொண்டாடினர்.
அதன்படி, விருத்தாசலத்தில் அக்கட்சியின் மாவட்டத் தலைவர் தேவ.சரவணசுந்தரம் தலைமையில் கட்சியினர் ஒன்றுகூடி பொதுமக்கள், வியாபாரிகளைச் சந்தித்து பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பெற்ற பலன்கள் குறித்த துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர். கட்சியின் நகரத் தலைவர் முருகன் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.