கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் பயன்பாடின்றி வீணாகும் விவசாய இயந்திரங்கள்

குறிஞ்சிப்பாடி வட்டார விவசாயிகளின் பயன்பாட்டுக்காக தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்துக்கு

News image
Updated On :8 பிப்ரவரி 2018, 3:17 am

குறிஞ்சிப்பாடி வட்டார விவசாயிகளின் பயன்பாட்டுக்காக தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்துக்கு ரூ.20 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்ட விவசாயத் தொழில்நுட்ப இயந்திரங்கள் பராமரிப்பின்றி வீணாகி வருகின்றன.
 விவசாயப் பணிக்கு ஆள் பற்றாக்குறை நிலவி வரும் தற்போதைய சூழலில், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் அதன் உறுப்பினர்களுக்கு குறைந்த வாடகையில் வழங்க விவசாயத் தொழில்நுட்பக் கருவிகளை அரசு அளித்துள்ளது. நெல் சாகுபடியில் ஆள்களை வைத்து நடவு செய்வதில் ஏற்படும் காலதாமதம், ஆள் பற்றாக்குறை பிரச்னைகளால் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுகிறது. இதற்காக நெல் நடவு இயந்திரம் உள்ளிட்ட இயந்திரங்கள் அளிக்கப்பட்டன.
 குறிஞ்சிப்பாடியில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது.
 இந்தச் சங்கத்தில் விவசாயிகள் பலர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் பயன்பெறும் வகையில் குறைந்த வாடகையில் விவசாய இயந்திரங்களை வழங்க வேண்டுமென கடலூர் மாவட்ட உழவர் மன்றத் தலைவர்கள் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் கோரிக்கை விடுத்தனர். இந்தக் கோரிக்கையை ஏற்ற அப்போதைய கடலூர் மாவட்ட மத்திய வங்கிச் செயலர் ரூ.20 லட்சம் செலவில் விவசாயக் கருவிகளை வழங்கினாராம். ஆனால், இந்தக் கருவிகள் முறையாகப் பராமரிக்கப்படாமல், உரிய பயன்பாடின்றி வீணாகி வருகின்றன. இதுகுறித்து குறிஞ்சிப்பாடி உழவர் மன்றத் தலைவர் ஆர்.கே.ராமலிங்கம் கூறியதாவது:
 குறிஞ்சிப்பாடியில் இயங்கி வரும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம், கடந்த காலங்களில் 4 முறை மாநில அளவில் சிறந்த வங்கி என்று தமிழக அரசால் பாராட்டுச் சான்றிதழ் பெற்ற வங்கியாகும். இந்தச் சங்கத்தில் குறிஞ்சிப்பாடி வட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.
 கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் உழவர் மன்றத் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று, அப்போதைய கடலூர் மாவட்ட மத்திய வங்கியின் செயலரும், மாவட்ட இணைப் பதிவாளருமான மிருணாளினி, விவசாயிகள் பயன்பெறும் வகையில் நெல் நடவு இயந்திரம், மினி டிராக்டர், பவர் டில்லர், கை மற்றும் விசைத் தெளிப்பான், நாற்றுவிடும் தட்டு உள்ளிட்டவைகளை ரூ.20 லட்சம் மதிப்பில் பெற்றுத்தந்தார். நாளடைவில் அதிகாரிகள் இந்த இயந்திரங்களை முறையாகப் பராமரிக்கவில்லை. இதனால், விவசாய தொழில்நுட்பக் கருவிகள் வெயில், மழையால் பாதிக்கப்பட்டு துருப்பிடித்து வீணாகி வருகின்றன. எனவே, விவசாயிகள் பயன்பெறும் வகையில் புதிய இயந்திரங்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
 இதுகுறித்து தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க அதிகாரி ஒருவர் கூறியதாவது:
 விவசாய இயந்திரங்களை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்த விவசாயிகள் முன்வரவில்லை. மேலும், இந்த இயந்திரங்களில் பழுதை நீக்குவதற்கான செலவுத் தொகை குறிப்பிட்ட அளவுக்கு மேல் வழங்கப்படாத நிலையில் அவை செயலிழந்துள்ளன.
 இதனால், இந்த இயந்திரங்களை ஏலம் விடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.