நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மானிய விலையில் ஜிப்சம் உரம் வழங்கப்படுமா?

கடலூர் மாவட்டத்தில் கருகும் குறுவை நெல் பயிர்களைக் காப்பாற்ற தமிழக அரசு மானிய விலையில் ஜிப்சம் உரம் வழங்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

News image
Updated On :21 மே 2019, 2:56 am

ஜி.சுந்தரராஜன்

கடலூர் மாவட்டத்தில் கருகும் குறுவை நெல் பயிர்களைக் காப்பாற்ற தமிழக அரசு மானிய விலையில் ஜிப்சம் உரம் வழங்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
 கடலூர் மாவட்டமானது காவிரி டெல்டா மற்றும் டெல்டா அல்லாத பாசனப் பகுதிகளைக் கொண்டதாகும். இவ்விரு பகுதிகளிலும் ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். அதாவது, டெல்டா பாசனப் பகுதியில் சுமார் 25,000 ஏக்கர்களிலும், டெல்டா அல்லாத பாசனப் பகுதியில் சுமார் 75,000 ஏக்கர்களிலும் குறுவை சாகுபடி நடைபெறும்.
 இந்த மாவட்டத்தில் குறுவை நெல் சாகுபடி முழுவதும் நிலத்தடி நீரை நம்பியே மேற்கொள்ளப்படுகிறது. நிகழாண்டு மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணறுகளில் மின் மோட்டார்களை கொண்டு நிலத்தடி நீரை இறைத்து பெரும்பாலான விவசாயிகள் குறுவை பருவ நெல் சாகுபடி செய்துள்ளனர். நெல் நடவு செய்த வயல்களில் தினமும் தண்ணீர் விட்டு பயிர்களைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டுள்ளது. கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள சூழ்நிலையில், ஒரு நாள் தண்ணீர் விடவில்லை என்றாலும் பயிர்கள் கருகும் அபாயம் உள்ளது. மேலும், கடந்த ஆண்டு பருவ மழை போதிய அளவில் பெய்யாததால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகச் சரிந்து, போதிய தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
 இதுபோன்ற காலங்களில் மண்ணில் ஈரப் பதத்தை குறிப்பிட்ட கால அளவுக்கு பாதுகாக்க ஜிப்சம் உரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, தமிழக அரசு விவசாயிகளின் வேண்டுகோளுக்கு ஏற்ப ஜிப்சம் உரத்தை 50 சதவீத மானியத்தில் வழங்கியது. இதை தற்போது உடனடியாக வழங்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
 இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்க மாநிலச் செயலர் பெ.ரவீந்திரன் கூறியதாவது: சமீப ஆண்டுகளாக விவசாயிகளுக்குத் தேவையான ஜிப்சம் உரத்தை வேளாண் துறையினர் அவர்களுக்கு நேரடியாக வழங்குவதில்லை. மேலும், வேளாண் துறை மூலம் வழங்கப்படும் இடுபொருள்கள் அனைத்துக்கும் பின்னேற்பு மானியம் வழங்கும் நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால், ஜிப்சம் உள்ளிட்ட அனைத்து இடுபொருள்களும் வேளாண் துறை மூலம் நேரடியாக வழங்கப்படுவதில்லை.
 அரசு அறிவிக்கும் சிறப்பு தொகுப்புத் திட்டம் மூலம் விவசாயிகள் தங்களுக்குத் தேவையான இடுபொருள், உரங்களை கடைகளில் வாங்கி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
 பின்னர், அந்தப் பொருள்களுக்கான ரசீதை வேளாண் துறையிடம் ஒப்படைத்து பின்னேற்பு மானியம் பெற்றுக் கொள்வது தற்போதைய நடைமுறையாக உள்ளது.
 ஜிப்சம் உரம் விலை உயர்வால் அதை வாங்குவதை விவசாயிகள் பெருமளவில் தவிர்த்து வருகின்றனர். தற்போது நிலத்தடி நீர்மட்டம் சரிவால் போதிய தண்ணீர் கிடைக்கவில்லை.
 கோடை வெயிலின் தாக்கத்தால் குறுவை நெல் பயிர்கள் கருகும் அபாயம் உள்ளது. எனவே, தமிழக அரசு குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்தை அறிவித்து, வேளாண் துறை டெப்போக்கள் மூலம் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு ஜிப்சம் உரம் வழங்க வேண்டும். கருகும் குறுவை நெல் பயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.