சிதம்பரம் தொகுதியில் அதிமுக கூட்டணி தோற்றது ஏன்?
சிதம்பரம் (தனி) மக்களவைத் தொகுதியில் வெற்றியின் விளிம்பில் அதிமுக வேட்பாளர் தோல்வியை தழுவியதால் அந்தக் கட்சியினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


சிதம்பரம் (தனி) மக்களவைத் தொகுதியில் வெற்றியின் விளிம்பில் அதிமுக வேட்பாளர் தோல்வியை தழுவியதால் அந்தக் கட்சியினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இந்தத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொ.சந்திரசேகர் போட்டியிட்டார். திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், அமமுக வேட்பாளர் ஆ.இளவரசன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் தி.ரவி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எம்.சிவஜோதி உள்பட 13 பேர் போட்டியிட்டனர். இந்தத் தொகுதியில் மொத்தம் 14,79,108 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த ஏப்.18-ஆம் தேதி நடைபெற்ற வாக்குப் பதிவில் 11,49,538 வாக்குகள் பதிவாகின. இது 77.72 சதவீதமாகும்.
கடந்த 23-ஆம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் பலத்த இழுபறிக்கு பிறகு விசிக வேட்பாளர் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளர் பொ.சந்திரசேகரை விட 3,219 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றிப் பெற்றார்.
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்: விசிக வேட்பாளர் தொல்.திருமாவளவன் -5,00,229, அதிமுக வேட்பாளர் பொ.சந்திரசேகர்-4,97,010, அமமுக வேட்பாளர் ஆ.இளவரசன்-62,308, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் தி.ரவி -15,334, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எம்.சிவஜோதி -37471, நோட்டா -15,535.
2 தொகுதிகளில் அதிமுக வாக்குகள் சரிவு: சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தொகுதிகளில் விசிக வேட்பாளரை விட அதிமுக வேட்பாளர் குறைந்த வாக்குகளை பெற்றுள்ளார். இதுவே அவரது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.
சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக பெற்ற வாக்குகள்:
சிதம்பரம்: விசிக- 75,334 வாக்குகள், அதிமுக- 71,240 வாக்குகள், விசிக பெற்ற கூடுதல் வாக்குகள் -4,094.
காட்டுமன்னார்கோவில்: விசிக- 91,450 வாக்குகள், அதிமுக- 60,218 வாக்குகள், விசிக பெற்ற கூடுதல் வாக்குகள்- 31,232.
புவனகிரி: விசிக- 83,950 வாக்குகள், அதிமுக - 85,180 வாக்குகள், அதிமுக பெற்ற கூடுதல் வாக்குகள்- 1,230.
குன்னம்: விசிக- 86,488 வாக்குகள், அதிமுக- 87,938 வாக்குகள், அதிமுக பெற்ற கூடுதல் வாக்குகள்-1,450.
அரியலூர்: விசிக -85,678 வாக்குகள், அதிமுக- 90,319 வாக்குகள், அதிமுக பெற்ற கூடுதல் வாக்குகள்- 4,641.
ஜெயங்கொண்டம்: விசிக- 75,501 வாக்குகள், அதிமுக- 1,00,537 வாக்குகள், அதிமுக பெற்ற கூடுதல் வாக்குகள்- 25,036.
மேற்கண்ட 6 தொகுதிகளிலும் அதிமுக ஜெயங்கொண்டம் தொகுதியில் மட்டும் அதிகபட்சமாக 25,036 வாக்குகள் கூடுதலாகப் பெற்றது. கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சிதம்பரம், புவனகிரி பேரவைத் தொகுதிகளில் அதிமுகவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தன. ஆனால், தற்போதைய தேர்தலில் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் பேரவைத் தொகுதிகளில் அதிமுக மிகவும் குறைந்தளவு வாக்குகள் பெற்றதால் அந்தக் கட்சி தோல்வியை தழுவியுள்ளது.
இதனால் அதிமுக தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும், அமமுக வேட்பாளர் 62,308 வாக்குகளை பிரித்ததும் தோல்விக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ம.சந்திரகாசி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ஆனால், தற்போது கூட்டணி பலம் இருந்தும் தோல்வியை தழுவியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஜெயலலிதா மறைவை அடுத்து அதிமுக சந்தித்த இந்தத் தேர்தலில் கட்சியினர் முழுவீச்சில் பணியாற்றவில்லை என்ற கருத்தும் நிலவுகிறது.
மேலும், கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலர் ஏ.அருண்மொழிதேவன் பரிந்துரைத்த வேட்பாளரை அதிமுக தலைமைக் கழகம் அறிவிக்காமல், தமிழக அரசு அதிமுக கொறடா ராஜேந்திரனின் பரிந்துரையின்பேரில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொ.சந்திரசேகரை வேட்பாளராக அறிவித்தது கடலூர் மாவட்ட நிர்வாகிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுவும் தோல்விக்கு மற்றொரு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.
2-ஆவது முறையாக சிதம்பரத்தை கைப்பற்றிய விசிக: தொல்.திருமாவளவன் 1999, 2004, 2009, 2014 ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களிலும் சிதம்பரம் மக்களவை (தனி) தொகுதியில் போட்டியிட்டுள்ளார்.
இதில் 2009-ஆம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட அவர், மொத்தம் 4,28,804 வாக்குகள் பெற்று சுமார் 99 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளர் இ.பொன்னுசாமி 3,29,721 வாக்குகள் பெற்றார். அந்தத் தேர்தலில் கட்சியின் தேர்தல் அங்கீகாரத்துக்காக நட்சத்திர சின்னத்தில் திருமாவளவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தொல்.திருமாவளவன் பானை சின்னத்தில், சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் 5-ஆவது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...