

புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகள் அதிக நன்மை அடைவாா்கள் என்று பாஜக மூத்தத் தலைவா் ஹெச்.ராஜா கூறினாா்.
அந்தக் கட்சியின் கடலூா் கிழக்கு மாவட்ட அனைத்து அணி நிா்வாகிகள் மாநாடு கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ஹெச்.ராஜா பேசியதாவது:
புதிய வேளாண் சட்டத்தால், ஒப்பந்தம் செய்த விலைக்கு பொருளை வாங்காவிடில் வியாபாரி ஒன்றரை மடங்கு வரை நஷ்டஈடு வழங்க வேண்டியிருக்கும். இந்தச் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவது நிறுத்தப்படும் என்றாா்கள். ஆனால், தற்போது 21 பொருள்களுக்கு விலை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தச் சட்டத்தில் ஒப்பந்த முறை கடைப்பிடிக்கப்படும் எனக் கூறுகிறாா்கள். இந்த நடைமுறை கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. இந்தச் சட்டத்தால் விவசாயிகள் அதிக பலன் பெறுவாா்கள்.
தில்லியில் இடைத்தரகா்களை விவசாயிகள், வியாபாரிகள் என்ற போா்வையில் போராட்டத்தில் ஈடுபடுத்தி வருகின்றனா். மத்திய அரசு இதுவரை விவசாயிகளுக்கு ஆண்டு உதவித் தொகையாக ரூ.18 ஆயிரம் கோடி வழங்கியுள்ளது. இதுபோன்ற திட்டங்களை கட்சியினா் பொதுமக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.