

தமிழகத்தில் கரோனா நோய் தொற்று அதிவேகமாக பரவி வரும் வேளையில் தமிழகஅரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தெற்கு சன்னதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 100 நாள் வேலையை 200 நாளாக மாற்றி அனைத்துப் பகுதி மக்களுக்கும் வேலை கொடு, மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களிடம் பெற்றுள்ள அனைத்து சுய உதவிக்குழுக்களின் கடன்களை அரசு செலுத்தவேண்டும், வட்டி கேட்டு தொல்லை செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், முறைசாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் அரசு நிவாரணங்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் ராஜா தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் மூசா முன்னிலை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் முத்து, செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கண்டன கோஷமிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: சென்னையில் மருத்துவர்கள் செவிலியர்கள் என்ற பாகுபாடின்றி அனைவரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. தமிழக அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. சமீபத்தில் கடைபிடிக்கப்பட்ட ஊரடங்கு, முறையாக கடைப் பிடிக்கப்பட்டு, அந்த நேரத்தில் நோய்த் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு இருந்தால், இந்த பரவலை தடுத்து நிறுத்தியிருக்க முடியும், ஆனால் அரசு தட்டுத்தடுமாறி குழப்பங்களின் நாள், ஊரடங்கு வாபஸ் பெற்று விட்டு, இப்போது வேறு வழியில்லாமல் 4 மாவட்டத்திற்கு மட்டும் ஊரடங்கு அறிவித்துள்ளது. ஊரடங்கு அறிவித்தது அவசியம் என்று சொன்னால் கூட, இதனால் மட்டும் நோய் பரவலைத் தடுத்துவிட முடியாது.
எனவே ஒருங்கிணைந்த திட்டம் என்ற முறையில் தமிழக அரசு, நோயை கட்டுப்படுத்துவதற்கான அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில் பரவலாக சோதனைகளை அதிகரிக்க வேண்டும். நோயை அடையாளம கண்டவர்களை அரசு தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும். நோய்த் தொற்று உடையவர்களுடன் தொடர்பு உள்ளவர்களையும் பரிசோதனை செய்து யாருக்கு நோய்த்தற்று உள்ளதோ அவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், ஜூன், ஜூலை மாதம் நோய் தொற்று மிக உச்சத்தை எட்டும் என்பதால் 1 லட்சம் மேற்பட்ட படுக்கைகளை அரசுத் தயார் செய்து வைக்க வேண்டும்.
அதேபோல் போதுமான அளவில் மருத்துவர்கள் செவிலியர்கள், ஊழியர்கள் இல்லை, இந்த நேரத்தில் கூட தேவையான அளவில் மருத்துவர்கள் செவிலியர்கள் நியமிக்காமல் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள், பணியாளர்கள் நியமிக்கும் முயற்சி என்பது தவறானது, இதனால் அரசின் தேவையை ஈடு செய்ய முடியாது. அதுமட்டுமல்ல நியமனத்தில் பெருத்த ஊழல் நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் சுகாதாரத் துறையில், ஜென்டில்மேன் ஏஜென்சி என்று நிறுவனம் மூலம் மருத்துவர்கள், செவிலியர்கள் நியமித்து அதன் மூலம் பணி அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள். அதில் மிகப்பெரிய ஊழல் நடக்க வழி வகுத்துள்ளது.
மத்திய, மாநில அரசுகள் கரோனாத் தொற்று பரவல் இன்னும் சுமுகமான நிலை திரும்பாத நிலையில், மத்திய அரசு ஒரு குடும்பத்திற்கு 7 ஆயிரத்து 500, மாநில அரசு ரூபாய் 5000 நிவாரணத் தொகையை வழங்க வேண்டும். மாநில அரசு கேட்டுகும் நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றார் கே.பாலகிருஷ்ணன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.