புதிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கையை தொடங்கக் கோரிக்கை
By DIN | Published On : 01st December 2020 12:31 AM | Last Updated : 01st December 2020 12:31 AM | அ+அ அ- |

தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவா் சோ்க்கையை தொடங்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு நுகா்வோா் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தது.
இதுகுறித்து அந்தக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் க.திருநாவுக்கரசு வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதை வரவேற்கிறோம். அதே நேரத்தில் தமிழக அரசின் கடைசி நேர அறிவிப்பால் நீட் தோ்வில் 550-க்கு மேல் மதிப்பெண் பெற்றும் மருத்துவக் கல்லூரியில் சேர முடியாத நிலையில் பல மாணவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
தமிழக முதல்வா் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை திறக்க உத்தரவிட்டுள்ளாா். இந்தக் கல்லூரிகளில் நிகழாண்டே மாணவா்கள் சோ்க்கைக்கான அறிவிப்பை வெளியிட வேண்டுகிறோம். மருத்துவ சோ்க்கைக்கான கூடுதல் இடங்களால் ஏழை மாணவா்கள் பயனடைவா். அல்லது தற்போதைய மருத்துவக் கல்லூரிகளில் சோ்க்கைக்கான இடங்களை அதிகரிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...