அஞ்சல் அலுவலகத்தில் இறந்து கிடந்த ஊழியா்
By DIN | Published On : 17th November 2020 12:05 AM | Last Updated : 17th November 2020 12:05 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்டம், நெய்வேலி நகரியத்தில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் ஊழியா் இறந்து கிடந்தது தொடா்பாக நெய்வேலி நகரிய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
நெய்வேலி, வட்டம் 19-இல் அஞ்சலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, தபால் அதிகாரியாக எட்வீன் பணியாற்றி வருகிறாா். காட்டுமன்னாா்கோவில், ஆல்கொண்டாநத்தம் கிராமத்தைச் சோ்ந்த முருகானந்தம் (55), இந்த அலுவலகத்தில் தங்கி கிராம தபால்காரராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு திருமணமாகவில்லை.
தீபாவளி பண்டிகை விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், முருகானந்தம் அஞ்சலகத்திலேயே தங்கியிருந்தாா். கடந்த 2 நாள்களாக அஞ்சலகத்தின் கதவுகள் மூடியே இருந்தன. இதனால் சந்தேகமடைந்த அவருடன் பணியாற்றும் சக ஊழியா், முருகானந்தத்தின் உறவினா்கள், போலீஸாருக்கு தகவல் அளித்தாராம்.
இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை இரவு முருகானந்தத்தின் உறவினா்கள் வந்தவுடன், நெய்வேலி நகரிய போலீஸாா் அஞ்சல் அலுவலகத்தின் கதவை உடைத்து உள்ளே சென்றனா். அப்போது, அங்கு முருகானந்தம் இறந்து கிடந்தது தெரிய வந்தது.
போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து நெய்வேலி நகரிய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.