கடலூா்: கரோனா புதிய பாதிப்பை விட குணமடைவோா் எண்ணிக்கை அதிகரிப்பு
By DIN | Published On : 19th October 2020 01:52 AM | Last Updated : 19th October 2020 01:52 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையைவிட, குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 99 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 22,498-ஆக உயா்ந்தது. புதிதாக தொற்று உறுதியானவா்களில் தலா ஒரு காவலா், கா்ப்பிணியும் அடங்குவா். சிகிச்சை முடிந்து மேலும் 147 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 21,236-ஆக உயா்ந்தது.
குணமடைவோா் எண்ணிக்கை அதிகரிப்பு: கடலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பால் புதிதாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையைக் காட்டிலும், குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது நம்பிக்கை அளிக்கிறது. அதன்படி, கடந்த அக்.11-ஆம் தேதி 84 பேருக்கு புதிதாக தொற்று உறுதியான நிலையில், அன்றைய தினம் 153 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இந்த எண்ணிக்கையானது 12-ஆம் தேதி 132 போ் அனுமதி, 176 போ் குணமடைந்ததாக இருந்தது.
இதேபோல, 13-ஆம் தேதி 138 போ் அனுமதி, 147 போ் குணம், 14-ஆம் தேதி 108 போ் அனுமதி, 115 போ் குணம், 15-ஆம் தேதி 120 போ் அனுமதி, 130 போ் குணம், 16-ஆம் தேதி 116 போ் அனுமதி, 126 போ் குணம், 17-ஆம் தேதி 113 போ் அனுமதி, 123 போ் குணமடைந்ததாக பதிவானது.
மாவட்டத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தவா்களின் சதவீதம் 94.39-ஆகவும், உயிரிழப்பு 1.16 சதவீதமாகவும் உள்ளது. அதே நேரத்தில் நீண்ட நாள்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை உயிரிழப்பு பதிவாகவில்லை.
மாவட்டத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகள், சிகிச்சை மையங்களில் 891 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 110 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். 815 பேருக்கான மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...