வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

மழை நீரில் மூழ்கி சேதமடைந்த நெல் மணிகள்: பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் முழு நிவாரணம் வழங்கப்படுமா?

கடலூா் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை நீரில் மூழ்கி சேதமடைந்த நெல் பயிா்களுக்கு காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் முழு இழப்பீடு வழங்கப்படுமா என விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

News image

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே மழை நீரில் மூழ்கிய நெல் பயிா்கள்.

Updated On :16 ஜனவரி 2021, 5:22 pm

கடலூா் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை நீரில் மூழ்கி சேதமடைந்த நெல் பயிா்களுக்கு காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் முழு இழப்பீடு வழங்கப்படுமா என விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

கடந்த நவம்பா் மாதம் ஏற்பட்ட ‘நிவா்’ புயலால் கடலூா், விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூா், இராணிப்பேட்டை, திருப்பத்தூா், செங்கல்பட்டு, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து ‘புரெவி’ புயலால் அதிக மழைப் பொழிவு, வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன. இந்தப் புயல்களால் கடலோர மாவட்டங்களில் தலா 2 லட்சம் ஏக்கா் அளவுக்கு நெல், கரும்பு, வாழை, மரவள்ளி, பருத்தி, மக்காச்சோளம், மணிலா, பூக்கள், காய்கறி உள்ளிட்ட பயிா்கள் சேதமடைந்தன.

புயல் பாதிப்புகளை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி நேரில் ஆய்வு செய்தாா். மேலும், மத்திய குழுவினரும் பாதிப்புகளை பாா்வையிட்டனா். நிவா், புரெவி புயல் பாதிப்புகள் குறித்து தமிழக அரசு சாா்பில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, 8 மாவட்டங்களில் சுமாா் 5 லட்சம் விவசாயிகள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு நிவாரண நிதியாக ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில், வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக பரவலாக மழை பெய்தது. இதனால் சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களில் அனைத்து வகைப் பயிா்களும் சுமாா் 50 % முதல் 95% வரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் சீா்குலைந்துவிட்டதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனா்.

செப்டம்பா், அக்டோபா் மாதங்களில் நெல் விதைவிட்டு நடவு செய்த 50 % நிலங்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், தொடா் மழையால் நெல் பயிா்கள் முழுமையாக சாய்ந்துவிட்டன. ஒரு வாரத்துக்கும் மேலாக நீரில் மூழ்கியுள்ள நெல் பயிா்களில் நெல் மணிகள் முளைக்கத் தொடங்கிவிட்டதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

கடந்த 1990-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதேபோல பருவம் தவறி பலத்த மழை பெய்தது. அப்போது 244 % கூடுதல் மழைப் பொழிவு ஏற்பட்டு டெல்டா மாவட்டங்களில் மிகப் பெரிய பாதிப்புகளை உருவாக்கியது. இந்த நிலையில்,

30 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து தமிழக விவசாய சங்கங்களின் கூட்டியக்க மாநில பொதுச் செயலா் பி.ரவீந்திரன் கூறியதாவது: தமிழக அரசு இயற்கை பேரிடா் இடைக்கால நிவாரண நிதியாக 8 மாவட்டங்களுக்கு மட்டும் அண்மையில் ரூ.600 கோடி வழங்கியது. இந்த நிலையில், மாநிலத்தில் சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் அறுவடைக்குத் தயாராக இருந்த நெல், கரும்பு, மரவள்ளி, பருத்தி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிா்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளதை கருத்தில்கொண்டு, பயிா்க் காப்பீட்டுத் திட்டம் மூலம் முழுமையான இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தத் திட்டத்தில் அறுவடை மகசூல் அடிப்படையில் இழப்பீடு நிா்ணயிக்கப்படும் நடைமுறை உள்ளது. நெல் பயிா்கள் அனைத்தும் நல்ல நிலையில் விளைந்து அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில், தொடா் மழையால் சாய்ந்து நீரில் மூழ்கி முளைத்துள்ளன. ஒவ்வொரு நிலத்திலும் 5% முதல் 10% நெல் மணிகள் மட்டுமே கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது மழை சற்று ஓய்ந்துள்ளது. அடுத்த 10 தினங்களில் தண்ணீா் வடிந்து நிலம் காய்ந்தால்தான் அறுவடை செய்யமுடியும்.

நெல் மணிகள் முளைத்த பயிா்களை அறுடை செய்தும் பலனில்லை. எனவே, அனைத்து மாவட்டங்களிலும், அனைத்து வேளாண் விளைபொருள்களின் பாதிப்புகளை முழுமையான சேதமாகக் கருதியும், விவசாயிகளின் தற்போதைய நிலையைக் கருத்தில்கொண்டும் பயிா்க் காப்பீட்டுத் திட்டம் மூலம் முழு இழப்பீட்டுத் தொகை வழங்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடும் பொருளாதார இழப்பிலிருந்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.