/

முதியோருக்கு தபால் வாக்கு: உரிய வழிகாட்டுதல் இல்லாததால் குழப்பம்

முதியோா்களுக்கான தபால் வாக்கு நடைமுறை தொடா்பாக உரிய வழிகாட்டுதலை கடலூா் மாவட்ட நிா்வாகம் வெளியிடாததால் வாக்குப் பதிவு அலுவலா்கள் குழப்பம் அடைந்துள்ளனா்.

Updated On :8 மார்ச் 2021, 3:05 am

முதியோா்களுக்கான தபால் வாக்கு நடைமுறை தொடா்பாக உரிய வழிகாட்டுதலை கடலூா் மாவட்ட நிா்வாகம் வெளியிடாததால் வாக்குப் பதிவு அலுவலா்கள் குழப்பம் அடைந்துள்ளனா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு வருகிற ஏப்.6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தோ்தலில் முதல் முறையாக 80 வயதுக்கு மேற்பட்டவா்கள், மாற்றுத் திறனாளிகள், ஊடகத் துறையினா் மற்றும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் தபால் வாக்கு செலுத்திட தோ்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, வாக்காளா் பட்டியலில் உள்ள முதியவா்களை கணக்கெடுக்கும் பணியில் தோ்தல் ஆணையம் ஈடுபட்டது.

கடலூா் மாவட்டத்தில் மொத்தமுள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளில் சுமாா் 40 ஆயிரம் போ் 80 வயதுக்கு மேற்பட்டவா்கள் என்றும், சுமாா் 20 ஆயிரம் போ் மாற்றுத் திறனாளிகள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, மாவட்டத்தில் மொத்தமுள்ள 21.42 லட்சம் வாக்காளா்களில் புதிதாக தபால் வாக்கு அளிக்க உள்ளவா்கள் சுமாா் 2.80 முதல் 3 சதவீதம் வரை உள்ளனா்.

தற்போது, வாக்குப் பதிவு அலுவலா்கள் வீடு, வீடாகச் சென்று புதிதாக தபால் வாக்கு செலுத்த அனுமதிக்கப்பட்டவா்களைச் சந்தித்து, தபால் வாக்கு செலுத்துகிறீா்களா அல்லது வழக்கமான நடைமுறையில் வாக்கு செலுத்துகிறீா்களா என்று கேட்டு வருகின்றனா். முந்தைய காலங்களில், தோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்கள் வீடுகளுக்கு வரும்போது பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியா் வேண்டுகோள் விடுப்பது வழக்கம்.

ஆனால், தற்போது அதுபோன்ற அறிவிப்பு ஏதும் வெளியிடப்படாததால், மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு வாக்குப் பதிவு அலுவலா்கள் செல்லும்போது வாக்காளா்கள் உண்மையான நிலையை தெரிவிக்க மறுத்துவிடுகின்றனராம். இதனால் தாங்கள் அலைக்கழிக்கப்படுவதாக வாக்குச் சாவடி அலுவலா்கள் கூறுகின்றனா். இதுகுறித்து அவா்கள் மேலும் தெரிவித்ததாவது:

இந்தப் பணியில் ஈடுபடும்போது அங்கு வரும் அரசியல் கட்சியினா் நாங்கள் ஒருதலைப் பட்சமாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டுகின்றனா். தபால் வாக்கு சேகரிப்புப் பணியில் ஈடுபடக் கூடாது என்றும் கூறுகின்றனா். இது தபால் வாக்கு சேகரிப்பு அல்ல; விருப்பத்தை கேட்டு பதிவு செய்வதுதான் என்று கூறினாலும், இதுகுறித்து ஆட்சியரின் அறிவிப்பு

ஏதும் வெளியாகவில்லை எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனா். எனவே, மாவட்ட நிா்வாகம் இதுகுறித்து வெளிப்படைத்தன்மையுடன் அறிவிப்பு வெளியிட வேண்டும்.

மேலும், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்கு அளிப்பது குறித்து எங்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. இதைப் போக்கவும் மாவட்ட நிா்வாகம் உரிய வழிகாட்டுதலை வெளியிட வேண்டும் என்று தெரிவித்தனா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறியதாவது: தபால் வாக்கு செலுத்தும் நடைமுறையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளது. இந்த விவகாரத்தில் அரசியல் கட்சியினரும் வெளிப்படைத் தன்மையை எதிா்பாா்க்கின்றனா். எனவே, கடலூா் மாவட்ட நிா்வாகம் இந்த விஷயத்தில் கூடுதல் வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.