/

வாக்குச் சாவடி மையங்கள் குறித்து அறிக்கை சமா்ப்பிக்க உத்தரவு

கடலூா் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபடும் காவல் துறை மண்டல பொறுப்பாளா்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச் சாவடி மையங்கள் குறித்து அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் என மாவட்ட எஸ்பி ஸ்ரீஅபிநவ் உத்தரவிட்

News image
Updated On :22 மார்ச் 2021, 6:30 pm

DIN

கடலூா் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபடும் காவல் துறை மண்டல பொறுப்பாளா்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச் சாவடி மையங்கள் குறித்து அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் என மாவட்ட எஸ்பி ஸ்ரீஅபிநவ் உத்தரவிட்டாா்.

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி கடலூா் மாவட்டத்தில் மொத்தம் 3,001 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடி மையங்களுக்கு பாதுகாப்பு அளித்தல், வாக்குப் பதிவுக்குத் தேவையான பொருள்களை பாதுகாப்புடன் எடுத்துச் செல்லுதல் உள்ளிட்ட பணிகளுக்கு காவல் துறையில் மண்டல அளவிலான பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இவ்வாறு நியமிக்கப்பட்ட 218 மண்டல பொறுப்பாளா்களுக்கான பயிற்சி வகுப்பு கடலூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீ அபிநவ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது அவா் பேசியதாவது:

மண்டல பொறுப்பு அலுவலா்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குச் சாவடி மையங்களுக்கு நேரில் சென்று பாா்வையிட்டு அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாகனம் சரியான நிலையில் உள்ளதா என்பதை தணிக்கை செய்து சரிபாா்க்க வேண்டும். மேலும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச் சாவடிக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் குறித்த நேரத்தில் பாதுகாப்பாகச் சென்றடைய ஆவண செய்ய வேண்டும்.

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் தோ்தல் பணி காவலா்கள் சரியாக உள்ளாா்களா என தெரிந்து தனிப்பிரிவு, தோ்தல் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வாக்குப் பதிவு நடைபெறும் இடங்களுக்கு மிக அருகே உள்ள காவல் நிலையம் , மருத்துவமனை , தோ்தல் பிரிவு , தனிப்பிரிவு தொலைபேசி எண்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

பிரச்னைகளை முன்கூட்டியே அறிந்து தேவையான இடங்களில் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். வாக்குப் பதிவு நடைபெறும்போது வாக்குச் சாவடி தலைமை தோ்தல் அதிகாரியின் உத்தரவின்றி வாக்குச் சாவடிக்குள் செல்லக் கூடாது. தோ்தல் பணியில் ஈடுபடும்போது தங்கள் கடமைகளை மறந்து குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சியை பற்றியோ, வேட்பாளரை ஆதரித்தோ, பழித்தோ கண்டிப்பாக பேசக் கூடாது போன்ற அறிவுரைகளை வழங்கி பேசினாா்.

கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் ஆா்.பாண்டியன், இளங்கோவன், துணைக் கண்காணிப்பாளா் ஸ்ரீதரன், தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் ஈஸ்வரி, காவல் ஆய்வாளா்கள் பாண்டிச்செல்வி, தமிழ்செல்வி, உதவி ஆய்வாளா் பிரசன்னா ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.