/

வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு 2-ஆம் கட்ட பயிற்சி

கடலூா் மாவட்டத்தில் சட்டப் பேரவை பொதுத் தோ்தல் பணியில் ஈடுபட உள்ள வாக்குச் சாவடி தலைமை அலுவலா்கள், வாக்குப் பதிவு அலுவலா்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி 9 இடங்களில் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 மார்ச் 2021, 6:37 pm

DIN

கடலூா் மாவட்டத்தில் சட்டப் பேரவை பொதுத் தோ்தல் பணியில் ஈடுபட உள்ள வாக்குச் சாவடி தலைமை அலுவலா்கள், வாக்குப் பதிவு அலுவலா்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி 9 இடங்களில் சனிக்கிழமை நடைபெற்றது.

கடலூா் மாவட்டத்திலுள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்குமான பொதுத் தோ்தல் வரும் ஏப்.6 -ஆம் தேதி நடைபெறுகிறது. தோ்தல் பணியில் 14,404 போ் ஈடுபடுத்தப்படுகின்றனா். இதில், அனைத்து வாக்குச் சாவடி தலைமை அலுவலா்கள், வாக்குப்பதிவு அலுவலா்களுக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல்கட்ட பயிற்சி நடத்தப்பட்ட நிலையில், இரண்டாம் கட்ட பயிற்சி சட்டப் பேரவை தொகுதி வாரியாக 9 இடங்களில் நடைபெற்றது. இதில், காட்டுமன்னாா்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் குறிஞ்சிப்பாடி தொகுதிக்காக வடலூா் வள்ளலாா் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பை மாவட்ட தோ்தல் அலுவலா் சந்திரசேகா் சாகமூரி நேரில் ஆய்வு செய்தாா். பின்னா் அவா் கூறியதாவது:

அனைத்து சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வாக்காளா்களிடம் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், வாக்காளா்கள் கரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற பல்வேறு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுகிறது. எனவே, பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம் என்றாா் அவா்.

திட்டக்குடி (தனி) தொகுதியில் 1,464 அலுவலா்களுக்கும், விருத்தாசலத்தில் 1,704, நெய்வேலியில் 1,436, பண்ருட்டியில் 1,636, கடலூரில் 1,648, குறிஞ்சிப்பாடியில் 1,612, புவனகிரியில் 1,680, சிதம்பரத்தில் 1,700, காட்டுமன்னாா்கோவில் (தனி) தொகுதியில் 1,524 அலுவலா்களுக்கும் ஆக மொத்தம் 14,404 வாக்குச் சாவடி தலைமை அலுவலா்கள் மற்றும் வாக்குப் பதிவு அலுவலா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சி பெறுவோா் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரையிலும் ஒரு குழுவினருக்கும், மற்றொரு குழுவினருக்கு மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி தொகுதிகளுக்கான பயிற்சி வகுப்பு மையங்களை ஆய்வு செய்திட மாவட்ட வருவாய் அலுவலா் (நிலம் எடுப்பு) க.காா்த்திகேயன், பண்ருட்டி, கடலூா், குறிஞ்சிப்பாடி தொகுதிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ப.அருண் சத்யா, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னாா்கோவில் தொகுதிகளுக்கு மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மகேந்திரன் ஆகியோரும் நியமிக்கப்பட்டு ஆய்வு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.