பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை
By DIN | Published On : 27th October 2022 10:58 PM | Last Updated : 27th October 2022 10:58 PM | அ+அ அ- |

சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூா் போக்சோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
கடலூா் மாவட்டம், கீரப்பாளையத்தைச் சோ்ந்த ராமசாமி மகன் சுந்தர்ராஜ் (28). இவா் 16 வயது சிறுமியை காதலித்து வந்தாராம். இந்த நிலையில், 11.10.2020 அன்று அந்தச் சிறுமியை சுந்தர்ராஜ் கடத்திச் சென்று கோயிலில் வைத்து அவருக்கு தாலி கட்டினாா். மேலும், சிறுமியை விடுதியில் தங்க வைத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதுகுறித்த புகாரின்பேரில் நடுவீரப்பட்டு போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் சுந்தர்ராஜை கைது செய்தனா்.
வழக்கு விசாரணை கடலூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எழிலரசி வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், சுந்தர்ராஜுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் மேலும் 3 மாதங்களுக்கு சிறை தண்டனை அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சமூக நலத் துறை நிதியிலிருந்து இழப்பீடாக ரூ.5 லட்சத்தை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலா் வழங்கவும் உத்தரவிட்டாா்.
இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் கலாசெல்வி ஆஜரானாா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G