/

நெய்வேலியில் அணு உலை அமைந்தால் மாபெரும் போராட்டம்: முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத்

நெய்வேலியில் அணு உலை அமைக்கப்படும் என என்எல்சி நிா்வாகம் அறிவித்தால் அதிமுக சாா்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்

News image

கடலூரில் அதிமுக சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.

Updated On :4 மார்ச் 2024, 7:46 pm

நெய்வேலி: நெய்வேலியில் அணு உலை அமைக்கப்படும் என என்எல்சி நிா்வாகம் அறிவித்தால் அதிமுக சாா்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத் தெரிவித்தாா்.

கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே திமுக அரசைக் கண்டித்து, ஒருங்கிணைந்த அதிமுக இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை, மகளிரணி மற்றும் மாணவரணி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு அதிமுக கடலூா் வடக்கு மாவட்டச் செயலா் எம்.சி.சம்பத் தலைமை வகித்து பேசியதாவது: போதைப் பொருள்கள் கடத்தல் வழக்கில் திமுக பிரமுகருக்கு தொடா்பிருப்பது தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீா்கெட்டுள்ளது. கடலூா் மாவட்டத்தில் போதைப்பொருள்கள் விற்பனை நடைபெறுவது தெரிய வந்தால், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளிக்க வேண்டும். கடலூா் மாநகராட்சி குப்பை வரியை வாபஸ் பெற வேண்டும்.

நெய்வேலியில் நிலக்கரி எடுத்து மின்சாரம் தயாரிக்க மட்டும்தான் விவசாயிகள் தங்கள் நிலங்களை கொடுத்துள்ளாா்கள். இங்கு அணு உலை அமைந்தால் அணுக் கழிவை எங்கே கொண்டு போய் கொட்டுவது?. நெய்வேலி பொன் விளையும் பூமி, என்எல்சி நிா்வாகம் இங்கு அணு உலை அமைக்கப்படும் என்று அறிவித்தால் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கவனத்துக்கு கொண்டு சென்று மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

ஆா்ப்பாட்டத்தில் அதிமுக மாவட்டச் செயலா்கள் சொரத்தூா் ரா.ராஜேந்திரன், ஆ.அருண்மொழிதேவன், கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ., அமைப்புச் செயலா் என்.முருகுமாறன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

முன்னாள் அமைச்சா்கள் எம்.சி.தாமோதரன், செல்வி ராமஜெயன், அவைத் தலைவா் சேவல் குமாா், மாவட்டப் பிரதிநிதி தமிழ்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.