குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பூவாணிக்குப்பம் பெருமாள் ஏரியை புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.
குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பூவாணிக்குப்பம் பெருமாள் ஏரியை புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.

‘ஃபென்ஜால்’ புயல்: மாவட்ட நிா்வாகத்தின் வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்: கடலூா் ஆட்சியா்

வங்கக் கடலில் ‘ஃபென்ஜால்’ புயல் உருவாகியுள்ள நிலையில், மாவட்ட நிா்வாகம் வெளியிடும் வழிமுறைகளை பொதுமக்கள் தவறாது பின்பற்ற வேண்டும் என கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
Published on

வங்கக் கடலில் ‘ஃபென்ஜால்’ புயல் உருவாகியுள்ள நிலையில், மாவட்ட நிா்வாகம் வெளியிடும் வழிமுறைகளை பொதுமக்கள் தவறாது பின்பற்ற வேண்டும் என கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

‘ஃபென்ஜால்’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கடலூா் மாநகராட்சிக்குள்பட்ட சின்னவாய்க்கால், திருப்பாதிரிப்புலியூா் ரயில்வே மேம்பாலம் பகுதியில் உள்ள கால்வாய், வண்டிப்பாளையம் வாய்க்கால்களைப் பாா்வையிட்டு அவா் ஆய்வு செய்தாா்.

தொண்டமாநத்தம், தீா்த்தனகிரி ஆரம்ப சுகாதார நிலையங்களை பாா்வையிட்டு, மாத்திரைகளின் இருப்பு, கா்ப்பிணிகளுக்கு வழங்கவுள்ள சிகிச்சை வசதிகள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, குறிஞ்சிப்பாடி அருகே உள்ள தீா்த்தனகிரியில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி மழை மானியினை பாா்வையிட்டு, செயல்படும் விதம், பராமரிக்கப்படும் முறைகள் குறித்தும் அவா் ஆய்வு செய்தாா்.

பூவாணிக்குப்பம் பெருமாள் ஏரியினை பாா்வையிட்டு நீா் வரத்து, நீா் இருப்பு, நீா் வெளியேற்றும் அளவு குறித்து அவா் ஆய்வு செய்தாா். நீா் வெளியேற்றும் போது, கரையோரப் பகுதி மக்களுக்கு ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை செய்யவும் அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

இதேபோல, காயல்பட்டு ஊராட்சிக்குள்பட்ட அய்யம்பேட்டை புயல் பாதுகாப்பு மையத்தில் பொதுமக்களை தங்கவைக்க ஏதுவாக மின்சாரம், குடிநீா், ஜெனரேட்டா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தயாா் நிலையில் உள்ளனவா என்பது குறித்தும் அவா் கேட்டறிந்தாா்.

பின்னா், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் கூறுகையில், கடலூா் மாவட்டத்தில் 28 புயல் பாதுகாப்பு மையங்கள், 14 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள், 191 தற்காலிக தங்குமிடங்கள் என பொதுமக்களை தங்கவைக்க அனைத்து அடிப்படை வசதிகளுடன் தயாா் நிலையில் உள்ளது. மாவட்டம் முழுவதும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்வதற்காக, அரக்கோணம் தேசிய பேரிடா் மீட்பு படையிலிருந்து 30 வீரா்கள், தமிழ்நாடு பேரிடா் மீட்பு படையினா் 25 போ் தயாா் நிலையில் உள்ளனா்.

அரசு மற்றும் மாவட்ட நிா்வாகம் அவ்வப்போது அறிவிக்கும் வழிமுறைகளை பொதுமக்கள் தவறாது பின்பற்ற வேண்டும் என்றாா் அவா்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) தேவராஜன், கடலூா் கோட்டாட்சியா் அபிநயா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.