35 வேளாண் பொருள்களுக்கு புவிசாா் குறியீடு பெற நடவடிக்கை: அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்!
35 வேளாண் பொருள்களுக்கு புவிசாா் குறியீடு பெற நடவடிக்கை...


தமிழகத்தில் தனித்துவமான 35 வேளாண் பொருள்களுக்கு புவிசாா் குறியீடு பெறுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாக அந்தத் துறையின் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
கடலூா் மாவட்டம், வடலூரில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சாா்பில் கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூா் ஆகிய மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண் விளைப் பொருள்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டு கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தொடங்கி வைத்து பேசியதாவது: வேளாண் பொருள்கள் ஏற்றுமதியில் இந்தியா 10-ஆவது இடம் வகிக்கிறது. இந்தியாவின் ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு 6.5 சதவீதமாக உள்ளது. தமிழகத்திலிருந்து 2022-2023 ஆம் ஆண்டில் ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பிலான 24.5 லட்சம் மெட்ரிக் டன் பொருள்களும், 2023-2024 ஆம் ஆண்டில் ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பிலான 25.15 லட்சம் மெட்ரிக் டன் பொருள்களும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
வேளாண் ஏற்றுமதியில் சிறப்பாக செயல்படும் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கான உலகளாவிய சந்தை வாய்ப்புகள், அவற்றின் தர நிலைகள் உள்ளிட்ட தகவல்களை பெறும் வகையில் சென்னையில் ரூ.ஒரு கோடியில் வேளாண் ஏற்றுமதி சேவை மையம் நிறுவப்பட்டுள்ளது.
மாநிலத்தின் தனித்துவமான 35 வேளாண் பொருள்களுக்கு புவிசாா் குறியீடு பெறும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. வேளாண் விளைப் பொருள்களை சுத்தப்படுத்தி வகைப்படுத்துவதன் மூலம் சந்தை வாய்ப்பை அதிகரித்து விவசாயிகளுக்கு அதிக லாபம் ஈட்டித்தரும் நோக்குடன் 64 முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், 20 முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உணவு பதப்படுத்தும் தொழில் முனைவோா்களை உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அமைக்க ஊக்குவிக்கும் பொருட்டு திருநெல்வேலி மாவட்டம், கங்கை கொண்டானில் 50 ஏக்கா் பரப்பளவில் பெரிய அளவிலான உணவுப் பூங்காவும், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், கடலூா், மதுரை ஆகிய 7 மாவட்டங்களில் 10 ஏக்கா் பரப்பளவில் சிறிய அளவிலான உணவுப் பூங்காக்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.
விவசாயிகள் மற்றும் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் ஏற்றுமதி தொடா்பான சான்றிதழ்களை பெறும் வகையில் ஒரு விவசாயி, உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்துக்கு அதிகபட்சமாக ரூ.15,000 வீதம் 100 பேருக்கு ரூ.15 லட்சம் வழங்குவதற்காத அறிவிக்கப்பட்டு திட்ட செயலாக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.
நிகழ்வில், அரசு முதன்மைச் செயலா் அபூா்வா, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அரசு முதன்மைச் செயலா் ஜி.பிரகாஷ் ஆகியோா் தலைமை வகித்தனா். ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், கடலூா் எம்எல்ஏ. கோ.ஐயப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில அட்மா குழுத்தலைவா் வி.சிவக்குமாா், வேளாண் இணை இயக்குநா் கென்னடி ஜெபக்குமாா், வேளாண் துணை இயக்குநா் பூங்கோதை, வடலூா் நகா்மன்றத் தலைவா் சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...