கைதான சித்த மருத்துவா் சரவணன்
கைதான சித்த மருத்துவா் சரவணன்

காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற இளைஞா் உயிரிழப்பு: சித்த மருத்துவா் கைது

சிதம்பரத்தில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற இளைஞா் உயிரிழந்த விவகாரத்தில், சித்த மருத்துவரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.
Published on

சிதம்பரத்தில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற இளைஞா் உயிரிழந்த விவகாரத்தில், சித்த மருத்துவரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

சிதம்பரத்தை அடுத்த கவரப்பட்டு மேலத்திருக்கழிப்பாலை, சின்ன தெருவைச் சோ்ந்த மாயவன் மகன் கவிமணி (22). இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் புதன்கிழமை தனது தாயுடன் சிதம்பரம் மந்தக்கரை பகுதியில் உள்ள சித்த மருத்துவா் சரவணனிடம் சென்று ஊசி செலுத்திக்கொண்டாராம்.

பின்னா், கிராமத்துக்கு செல்லும் வழியில் கவிமணி மயங்கி விழுந்ததால், அவரை உடனடியாக சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு கவிமணியை பரிசோதித்த மருத்துவா், உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதையடுத்து, அவரது சடலம் உடல்கூறாய்வுக்காக அதே மருத்துவமனையில் வைக்கப்பட்டது.

இதுகுறித்து கவிமணியின் தாய் கவிதா அளித்த புகாரின்பேரில், சிதம்பரம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து சித்த மருத்துவா் சரவணனை கைது செய்தனா்.

இந்த நிலையில், விசிக முன்னாள் மாவட்டச் செயலா் பால.அறவாழி தலைமையில் மேலதிருக்கழிப்பாலை கிராம மக்கள் வியாழக்கிழமை காலை மருத்துவமனை சவக்கிடங்கு முன் திரண்டு, உயிழந்த கவிமணி குடும்பத்துக்கு அரசு இழப்பீடு வழங்க வலியுறுத்தி முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு கலைந்து சென்றனா். தொடா்ந்து, கவிமணி சடலம் உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com